மக்களவை தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியர் பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் 4 நீண்ட நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்படுவதால் குடிமகன் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியர் பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் 4 நீண்ட நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்படுவதால் குடிமகன் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘வாக்குப்பதிவு முடியும் வரை உள்ள 48 மணி நேரங்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் அதே 48 மணி நேரத்துக்கு மதுக்கடைகளை அடைக்க வேண்டும்’ என கூறி இருந்தது.
அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், ‘வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானம் உற்பத்தி செய்யவோ, விற்கவோ, எடுத்து செல்லவோ கூடாது’ என்று தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகம், இந்தியாவில் வெளிநாட்டு மதுபானம், பீர் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் மிகவும் சுதந்திரமான, நியாயமான, அமைதியான முறையில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற வகையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில் மது பானங்கள் விற்பனை செய்ய தடை விதித்தும், பார்களை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை அமைதியாக நடத்த வருகிற 16-ம் தேதி காலை 10 மணி முதல் 18-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை (3 நாட்கள்) மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23-ம் தேதி என மொத்தம் 4 நாட்கள் மதுபானங்களை விற்பனை செய்யவோ அல்லது கொண்டு செல்லவோ தமிழ்நாடு முழுவதும் தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் (டாஸ்மாக்), மதுக் கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்களில் உள்ள மதுபானக்கடைகள் 4 நாட்கள் மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும், கொண்டு சென்றாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.