கருமுட்டை விற்பனை வழக்கில் தொடர்புடைய ஈரோடு சுதா மருத்துவ மனைக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரி துறையினரின் சோதனையால் பரபரப்பு நிலவுகிறது.
ஈரோடு பெருந்துறை சாலையில் சுதா பல்நோக்கு மருத்துவமனை, சுதா மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மதியம் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக, மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்து தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரம் மருத்துவ சிகிச்சைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் தங்களது சோதனைகளை நடத்தினர். மருத்துவமனையின் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் அறையிலும் நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்குள்ள கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல், 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கருமுட்டை விற்பனை வழக்கில் இந்த சுதா மருத்துவமனையின் கருத்தரித்தல் மைய ஆய்வகத்துக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சீல் அகற்றப்பட்டு ஆய்வகம் தற்போது மீண்டும் செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனையில் தொடர்ந்து ஒரு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.