
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த தும்பலபட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் தயாரிக்கும் சேம்பர் செயல்பட்டு வருகிறது. இந்த சேம்பரில் கணக்கராக வேலை செய்து வந்தவர் சரவணன் (23). நேற்று முன் தினம் இரவு சேம்பருக்கு சென்ற சரவணன் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முயற்சித்தனர்.
செங்கல் தயாரிக்கும் சேம்பர் கொலை
அப்போது சேம்பரில் திரண்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சரவணனை கொன்ற குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் போலீஸாரிடம் வாக்கு வாதம் செய்தனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்து வைத்து சரவணன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சேம்பரில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
போலீசார் தீவிரமாக விசாரணை
அப்போது சேம்பரில் தங்கிப் பணியாற்றும் வட மாநிலத்தைச் சார்ந்த கோபால் மற்றும் அவரது மகள்கள் 16 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுமி இருவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று சேம்பரில் கோபால் மகள்கள் தங்கி இருந்த அறைக்குச் சரவணன் சென்று சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதனை வைத்து சிறுமிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை மெற்கொண்டனர்.
சரவணனை கொலை செய்த 16 வயது சிறுமி
விசாரணையில் 16 வயது சிறுமி சரவணனை கொலை செய்ததும், இந்த கொலையை மறைப்பதற்காக சிறுமியின் தந்தை மற்றும் 14 வயது சகோதரி இருவரும் உதவி செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சரவணன் 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும் சம்பவம் நடந்த இரவு நேரத்தில் சிறுமையை சரவணன் மறைவான இடத்திற்க்கு அழைத்து சென்ற போது சிறுமி சரவணனை தள்ளிவிட்டதில் கீழே விழுந்த சரவணனுக்கு தலையில் அடிபட்டு உயிரிழந்ததும் விசாரணையில் தெயரிவந்தது.
சிறையில் அடைப்பு
பின்னர் தனது தந்தை மற்றும் தங்கையிடம் நடந்ததை சிறுமி கூறிய போது கொலையை மறைப்பதற்கு இருவரும் உதவி செய்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. வடமாநிலத் தொழிலாளியான கோபால் மற்றும் இரண்டு மகள்கள் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனியார் செங்கல் சேம்பரில் வடமாநில சிறுமி இளைஞரை கொலை செய்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.