ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர்களில், ஒரு மாணவனின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மாணவனின் உடல் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஒரு மாணவரின் உடல் கிடைத்த நிலையில், மற்றொரு மாணவனின் உடல் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நாகர்கோவில் ஆற்று கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் பாலகிருஷ்ணன் வயது 21 பாலக்கோடு அரசு கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது நண்பர் அதியமான் கோட்டை அடுத்த ஆத்துகொட்டாய் பகுதியைச் சேர்ந்த முல்லைவேந்தன் மகன் தனுஷ் (வயது 19) ஆட்டுக்கார பட்டி தனியார் கல்லூரியில் டி ஃபார்ம் படித்து வந்தார். மற்றொருவர் சாமுவேல் ஆகிய மூன்று பேரும் நேற்று இருசக்கர வாகனத்தில் அஞ்செட்டி கோவிலுக்கு சென்றனர். பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது ஒகேனக்கல் வந்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர்.பின்னர் ஆலம்பாடி புளியந்தோப்பு காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பாலகிருஷ்ணன், தனுஷ் ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்ற போது முடியவில்லை. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். இதுதொடர்பாக மற்றொரு நண்பர் சாமுவேல் ஒகேனக்கல் போலீசுக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் தனுஷ் ஆகியவரை தேடி பாலகிருஷ்ணனின் உடலை மட்டும் மீட்டனர்.
தனுஷின் உடல் கிடைக்காததால் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.