அடிப்படை வசதிகள் தேவை: தர்மபுரியில் பழங்குடியினர் சாலை மறியல் - கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

By Manikanda Prabu  |  First Published Jun 4, 2023, 4:34 PM IST

அடிப்படை வசதிகள் வேண்டி தர்மபுரி மாவட்டத்தில் பழங்குடியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சிகரல அள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட மாதுகொட்டாய்  மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பத்தினர்  நான்கு தலைமுறையாக  குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 

இவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சாலைவசதி, தெருருவிளக்கு வசதிகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் எதுவும் இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், அரசு மருத்துவமனைக்கு செல்ல   சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்ததோ அல்லது தூக்கி கொண்டோ  செல்ல வேண்டிய அவலநிலையில்  உள்ளனர். 

Tap to resize

Latest Videos

இதே போல் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், பாம்பு, தேள், போன்ற விஷஜந்துக்கள் கடித்து பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள், சாலை வசதி இல்லாததால்  உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிலபேர் செல்லும் வழியிலேயே இறந்துட்டதாக கண்ணீர் மல்க பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குடிநீர் வசதி இல்லாததால் மழைக் காலங்களில் மழைநீரை சேகரித்து வைத்து கொண்டு அதை பயன்படுத்தி வருவதாகவும், சாலைவசதி இல்லாததால் மழைநீரில் சேரும் சகதியால் மண்வழி சாலையும் குண்டும் குழியுமாக  மாறி உள்ளதால்  பைக்கில் கூட செல்லமுடியாத  அவலநிலையில் உள்ளதாக கூறுகின்றனர். இது மட்டும் இல்லாமல், மலைகளால் சூழப்பட்டு நடுவே இந்த கிராமம் இருப்பதால் விஷப்பூச்சிகள் கடித்தால் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

தமிழக பயணிகள் 8 பேர் பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு: மாநில கட்டுப்பாட்டு மையம்!

“தேர்தல் நேரத்தில் மட்டும் அனைவரும் வந்து எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறோம் என்று  வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால் தற்போது வரை எங்களுக்கு தேவையான வசதிகள் எதுவும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றோம். இந்த அவலநிலையை மனுவாக எத்தனை முறை மாவட்ட நிர்வாகத்திடமும், பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் அளித்தாலும் எந்தவித பலனும் இல்லை.” எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், மாதுகொட்டாயிலிருந்து ஏரியூர் செல்லும் சாலையில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும், பழங்குடியின மக்கள் 70க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

மாவட்ட நிர்வாகம் மாதுகொட்டாயிலிருந்து சுமார் 3கிலோமீட்டர் காங்கேயன் கொட்டாய் வரை தார்சாலை அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்பதே அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இவர்களை மாவட்ட நிர்வாகம் கண்திறந்து பார்த்து இவர்களுக்கு கிடைக்கவேண்டிய அரசு சலுகைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

click me!