தருமபுரி மாவட்டத்தில் மாட்டு இறைச்சி எடுத்துச் சென்ற பெண்ணை அரசுப் பேருந்து நடத்துநர் பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கி விட்ட சம்பவம் அப்பகுதியி்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நவலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை (வயது 59). தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் நாள்தோறும் அரூர் நகரத்தில் இருந்து நவலை கிராமத்திற்கு அவரது அன்றாட வாழ்விற்காக மாட்டிறைச்சி எடுத்து சென்று வியாபாரம் செய்வது வழக்கம். வழக்கம்போல் மாட்டிறைச்சி வாங்கி கொண்டு அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார்.
அப்போது பயணச்சீட்டு எடுக்க வந்த நடத்துனர் ரகு என்பவர் இதற்கு முன் உன்னை எத்தனை முறை வர வேண்டாம் என்று சொல்லி இருந்தேன். இப்போது ஏன் வந்தாய் முதலில் பேருந்தை விட்டு கீழே இறங்கு என்று அவர் மனது புண்படும்படியும், மன உளைச்சலுக்கு ஆளாக்கி அரூர் மோப்பிரிப்பட்டி காட்டுப்பகுதியில் பேருந்தை நிறுத்தி கீழே இறக்கி விட்டுள்ளார். மேலும் வயதான அந்த மூதாட்டி, இன்று ஒரு நாள் மட்டும் என்னை விட்டு விடுங்கள். இனி நான் கொண்டு வரமாட்டேன். தயவு செய்து என்னை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் கூட இறக்கி விடுங்கள் என்று நடத்துனரிடம் கேட்டுள்ளார்.
நாகை மீனவர்களின் வலைகளை கிழித்து புதுவை மீனவர்கள் அட்டூழியம்; மீனவர்கள் குமுறல்
அதை பொருட்படுத்தாமல் நடத்துனர் அந்த மூதாட்டியை சுட்டெரிக்கும் வெயில் என்றும் பாராமல் சாலையிலேயே இறக்கி விட்டு சென்றுள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி உள்ள நிலையில், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தருமபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம் நடத்துனர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமாரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஓட்டுநர், நடத்துநர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் மீது இது போன்ற ஆதிக்க சாதியினர் ஏற்படுத்தும் இன்னல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு தான் போபாளையம்பள்ளி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு சிரட்டையில் டீ கொடுத்த சம்பவம் அரங்கேறிய நிலையில் அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்த முதியவர் ஒருவரை பாதி வழியில் இறக்கி விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆசைஆசையாய் காதலனை கரம் பிடித்த ஆசிரியை; 6 மாதத்தில் மர்மமான முறையில் மரணம் - திருச்சியில் பரபரப்பு
தமிழக அரசு தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய ஆட்சிக்கும் அரசுக்கும் அவபெயர் ஏற்படுத்தும் அரசு அலுவலர்களை கண்காணித்து காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.