சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம்.!

Published : Jun 21, 2023, 01:11 PM IST
 சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம்.!

சுருக்கம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்கவில்லை எனக் கூறி சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி ஜூன் 7ம் தேதி சீல் வைக்கப்பட்டது. 

சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவிலை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. 

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்கவில்லை எனக் கூறி சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி ஜூன் 7ம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்தும், கோவிலை மீண்டும் திறக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், விழுப்புரம் மாவட்டம் கிராமம் கரிபாளையத்தைச் சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அந்த மனுவில், கோவிலில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படவில்லை எனவும்,  தீண்டாமை பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட பொதுமக்கள் இல்லாமல் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது கோவிலில் தினசரி பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்ற ஆகமத்தை மீறும் வகையில்  சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கு சீல் வைப்பதை தவிர்த்து, பொதுமக்களை அனுமதிக்காமல் பூஜைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி,   கோவிலுக்கு சீல் வைக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் திருவிழாவில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அறநிலைய துறை கோவிலுக்கு தக்காரை நியமித்த போதும், அவரால் பொறுப்பேற்க முடியவில்லை என்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, பிரச்னை தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், கோவில் விவகாரத்தில் அறநிலையத் துறை தான்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக அறநிலையத் துறையை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர். மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி  பரிசீலிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு