போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு..! விடுமுறை ரத்து..!

By Manikandan S R SFirst Published Dec 22, 2019, 9:51 AM IST
Highlights

போக்குவரத்து கழக ஊழியர்கள் யாரும் நாளை விடுமுறை எடுக்க கூடாது என சென்னை போக்குவரத்து கழகம் திடீர் உத்தரவு போட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தர பிரதேச மாநிலத்திலும் கட்டுக்கடங்காமல் நடைபெறும் கலவரத்தில் இதுவரையில் 16 பேர் கொல்லப்பட்டுள்னர். குடியுரிமை மசோதாவிற்கு முக்கிய எதிர்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழகத்திலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆளும் அதிமுக குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பாக நாளை தலைநகர் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அரசியல் கட்சிகள், இயங்கங்கள். வணிகர் சங்கம், நடிகர் சங்கம், தொழிலாளர் அமைப்புகள் என 98 க்கும் மேற்பட்ட இயக்கங்களுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

போக்குவரத்து கழக ஊழியர்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். இந்தநிலையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் யாரும் நாளை விடுமுறை எடுக்க கூடாது என சென்னை போக்குவரத்து கழகம் திடீர் உத்தரவு போட்டுள்ளது. அனைவரும் நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்றும் வார விடுமுறை இருப்பவர்கள் பிறிதொரு நாளில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. திமுக சார்பாக நடைபெறும் பேரணியில் பங்கேற்பதை தடுப்பதற்காகவே இந்த திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

click me!