திமுகவின் நிர்வாகி ஒருவர், போதைப்பொருள் விற்பனை செய்து முறைகேடாக சம்பாதித்த பணத்தின் மூலம் செல்வந்தராக மாறியுள்ளார். இவர் சொன்ன உளவுத் துறையின் செயல்பாடுகளை சமீபத்திய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் கேள்விக்குறியாக்கியுள்ளது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல், பள்ளி மாணவர்களைக் கூட விட்டு வைக்காத போதைப் பொருட்களின் தாக்கம், தமிழகம் முழுவதுமே பரவலாக போதைப்பொருள்கள் கிடைப்பது ஆகியவைக் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை சுட்டிக் காட்டி, திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.
சமூகத்தில் போதைப்பொருளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் திமுக அரசு முழுவதுமாகத் தோல்வியடைந்த நிலையில், தமிழக பாஜகவின் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக முதலமைச்சர், ஒரு மேம்போக்கான அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை அதிகாரிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் ஆகியோர், போதைப் பொருள்கள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் தங்கள் பங்கு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
மேலும், போதைப்பொருளின் தீய விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மருத்துவர்கள் மற்றும் மனநல மருத்துவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். உளவுத் துறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறியிருந்தார். தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பில் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பிடிபட்டால், அவர்களின் சொத்துக்களைத் தமிழக அரசு பறிமுதல் செய்யும் என முதலமைச்சர் எச்சரித்திருந்த அதே காலகட்டத்தில், அவரது கட்சியான திமுகவின் நிர்வாகி ஒருவர், போதைப்பொருள் விற்பனை செய்து முறைகேடாக சம்பாதித்த பணத்தின் மூலம் செல்வந்தராக மாறியுள்ளார்.
இவர் சொன்ன உளவுத் துறையின் செயல்பாடுகளை சமீபத்திய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் கேள்விக்குறியாக்கியுள்ளது. நான்கு மாதங்கள், தொழில்நுட்பம் மூலமாகவும், களத்திலும் தீவிரமாக கண்காணித்ததோடு, நியூசிலாந்து சுங்க அதிகாரிகள், ஆஸ்திரேலியா காவல்துறை மற்றும் அமெரிக்க போதைப் பொருள் அமலாக்கத்துறை ஆகியோரின் உதவியுடன், மத்திய அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை, கடந்த பிப்ரவரி 24 அன்று, டெல்லியில் சூடோஎபெட்ரீன் என்ற அதிக போதை தரும் செயற்கை வேதிப்பொருளை, சத்துமாவு, உலர்ந்த தேங்காய்த் தூள் என்ற போர்வையில் கடத்த முயன்ற, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தது.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?
இந்த போதைப்பொருள் மாஃபியாவின் தலைவனாகச் செயல்பட்டவர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக அயலகப் பிரிவின் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஆவார். கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை, சுமார் 3,500 கிலோ சூடோஎபெட்ரீன் வேதிப்பொருளை இதுவரை அனுப்பியிருப்பதும், சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் செயல்படும் இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலைக் கைது செய்து, இந்தக் கடத்தல் வலையை அறுத்தெறிய, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை, அந்தந்த நாட்டு அதிகாரிகளையும் அணுகியுள்ளது.
இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் என்பவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகியாக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக, ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சலீம் ஆகியோர், தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பல திமுக தலைவர்களுடனும், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுடன், கட்சிக்கு நன்கொடை, நிவாரண நிதி உள்ளிட்டவை வழங்கி நெருக்கமாகச் செயல்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர், கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்சிகளுக்கு வழங்கிய நிதி குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை, தமிழகத் திரைப்படத் துறையில் முதலீடு செய்து, கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தங்களது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, சமூகத்தின் நலனைப் புறக்கணித்த அவரது திரைத்துறை கூட்டாளிகள் யார் யார் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். போதைப்பொருள் கடத்தல் என்பது நம் தேசத்தின் மீது நடத்தப்படும் போர் என்பதை மனதில் கொண்டு, இந்த கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக, தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்த செய்தி, நேற்று காலையில் வெளியானதில் இருந்து, இதுவரை இது தொடர்பாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக பழகிய திமுக மற்றும் தமிழ்த் திரையுலகைச் சார்ந்தவர்கள், இதுவரை விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.
கட்சியிலிருந்து பதவி நீக்கம் மட்டும் செய்தால், மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என்று திமுக நம்பினால், அவர்கள் கணிப்பு தவறு. இந்த விவகாரத்தில், திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் பாஜக தமிழக அரசை வலியுறுத்துகிறது. தமிழக அரசு செயல்படுவது பொதுமக்களுக்காகவே தவிர, போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என்பதை திமுக அரசுக்கு நினைவூட்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
வெறும் 37 ஆயிரம் ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்கலாம்.. தள்ளுபடி விலையில் ஐபேடையும் வாங்குங்க..