அலட்சியம் வேண்டாம்.. வீரியமிக்க புதிய கொரோனா வேகமாக பரவுகிறது.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்..!

By vinoth kumarFirst Published Dec 22, 2020, 1:33 PM IST
Highlights

புதுவித கொரோனா வைரஸ் என தகவல்தான் வந்துள்ளது என்றும் ஆனால் அதன் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உறுதி செய்யப்படவில்லை என்று தமிழக சுகாராரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  கூறியுள்ளார். 

புதுவித கொரோனா வைரஸ் என தகவல்தான் வந்துள்ளது என்றும் ஆனால் அதன் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உறுதி செய்யப்படவில்லை என்று தமிழக சுகாராரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  கூறியுள்ளார். 

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்:- வெளிநாடுகளில் இருந்தோ, வேறுமாநிலங்களில் இருந்தோ தமிழ்நாட்டுக்கு வந்தால் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறோம். அதை கடுமையாக பின்பற்ற வேண்டும். இதை மாவட்ட ஆட்சியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகளும் கண்காணிப்பார்கள். யாருக்காவது அறிகுறிகள் தோன்றினால் அவர்கள் தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

விமான நிலையங்களிலும், பணி செய்யும் இடங்களிலும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா பாதித்தவர்களுடன் பழகியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 4, 5 நாட்களாக அறிகுறி இருப்பவர்களும் பரிசோதனை செய்வது அவசியம்.  கடந்த 10 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு 1078 பேர் பயணம் செய்ததை இ-பாஸ் மூலம் எடுத்து அவர்களுக்கு அறிகுறிகள் இருக்கிறதா என்று நாங்கள் பரிசோதித்துள்ளோம். டெல்லியில் இருந்து நேற்று 533 பேர் விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களுக்கு பரிசோதித்ததில் எந்த அறிகுறியும் இல்லை.

இதுபோன்ற பயணிகளுக்கும் அறிகுறிகள் தென்பட்டால் நாங்களே சோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம். கடந்த 10 நாட்களுக்குள் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளை கண்டுபிடித்து பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இதுதொடர்பாக முதல்வர் எந்த சுணக்கமும் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதை நாங்கள் தீவிரமாக கண்காணிக்கிறோம். பொதுமக்கள் தங்களுக்கு அறிகுறிகள் இருக்கும்போது அதை அலட்சியப்படுத்த வேண்டாம். நாம் பழகியவர்களில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தாலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் மூலமோ, வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் மூலமோ நாம் தமிழகத்தில் கொரோனா பரவலை அதிகரித்துவிடக்கூடாது. நாம் கண்டிப்பாக முககவசம் அணிந்துகொள்ள வேண்டும். சென்னை ஐஐடியில் பரிசோதனை செய்ததால் தான் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை கண்டுபிடித்தோம். பொதுமக்கள் வாட்ஸ்-அப் மூலம் பரவும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இரவு நேரத்தில் வந்தாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். இரவில் அறிகுறி தெரிந்தால் கூட பகலில் போகலாம் என்று தாமதம் செய்ய வேண்டாம். பதட்டமாகவும் இருக்க வேண்டியதில்லை. புதிய வகை வைரஸ் பற்றி அறிகுறி தெரிந்தால் புனேயில் உள்ள என்.ஐ.டி.க்கு அனுப்பி உறுதி செய்வோம். அதுவரை நோயாளியை கண்காணித்து இங்கேயே குணப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு லண்டனில் இருந்து சென்னை வந்த பயணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தனிமையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். அந்த பயணி லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்துள்ளார். அவருடன் பயணம் செய்தவர்களையும் கண்காணித்து வருகிறோம். ஆனால் கொரோனா பாதித்த பயணி சாதாரணமாகத்தான் இருக்கிறார். அவரது பரிசோதனை முடிவுகளை புனேயில் உள்ள என்.ஐ.டி.க்கு அனுப்பி உள்ளோம் என்று கூறியுள்ளார். 

click me!