சமூக ஊடகங்களில் அநாகரிகமாக அவதூறு பரப்பினால்... தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

Published : Jul 06, 2021, 08:41 AM ISTUpdated : Jul 06, 2021, 07:34 PM IST
சமூக ஊடகங்களில் அநாகரிகமாக அவதூறு பரப்பினால்... தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

சுருக்கம்

சமூக ஊடங்களில் அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்ற செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.   

இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக ஊடகங்கள்/பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை தூண்டி வருகின்றனர்.
அதிலும் குறிப்பிட்ட சிலர், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும், மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான, தரம் தாழ்ந்த கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்ற செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன.
காவல் துறையை பொறுத்தவரை, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களை தூண்டும் வகையிலும் அமைந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சட்ட நடவடிக்கைகள் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் முழுவதும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறு பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?