ஒரேவொரு மாணவனுக்காக திறக்கப்பட்ட அரசு பள்ளி… - கோவை அருகே ஸ்வாரஸ்யம்

By Asianet TamilFirst Published Jun 21, 2019, 12:49 PM IST
Highlights

கடந்தாண்டு மூடப்பட்ட அரசு ஆதிதிராவிட நலப்பள்ளி, ஒரேவொரு மாணவனுக்காக இந்தாண்டு திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே நடந்த இச்சம்பவம், ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 72 துவக்கப் பள்ளிகள் உள்ளன. சின்னக்கல்லார் 'டான்டீ' எஸ்டேட்டில் கடந்த 1943ம் ஆண்டு, ஆதிதிராவிடர் அரசு நலப்பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளியில், ஆண்டுக்காண்டு மாணவர்களின் சேர்க்கை குறைந்து கொண்டே இருந்தது.

இதைதொடர்ந்து கடந்தாண்டு, ஒரு மாணவரும், அப்பள்ளியில் சேரவில்லை. இதனால், ஆதிதிராவிடர் அரசு நலப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. இங்கு வேலை பார்த்த ஆசிரியர்கள், வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சின்னக்கல்லாறை சேர்ந்தவர் ராமையா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களது மகன் மகன் சிவா (5). இந்தாண்டு சிறுவன் சிவாவை, ஆதிதிராவிடர் அரசு நலப்பள்ளி சேர்க்க ராமையா முடிவு செய்தார். இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, ஒரு மாணவனுக்காக அந்த பள்ளியை மீண்டும் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி, தற்போது அந்த பள்ளி திறக்கப்பட்டது. அங்கு, ஆசிரியராக செல்வக்குமார் என்பவர், நியமிக்கப்பட்டுள்ளார்.

சின்ன கல்லார் பகுதிக்கு, போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் காலை 11:00 மணிக்கு ஆசிரியர் பள்ளிக்கு வருகிறார். அதே போல மதியம் 2 மணிக்கு சென்று விடுகிறார். சுமார் 3 மணிநேரம் மட்டும் சிறுவன் சிவாவுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இதற்கிடையில், மாணவன் சிவாவுக்கு பாடப்புத்தகம், நோட்டு, பை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. சீருடை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!