வாக்குப்பதிவு நாளன்று அராஜகங்களை கட்டவிழ்த்து விட திமுகவினர் திட்டம்.. பாஜக பிரமுகர் பகீர் தகவல்!

By vinoth kumar  |  First Published Apr 17, 2024, 1:19 PM IST

வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்து மூன்று நாட்களாக பணப்பட்டுவாடா தாராளமாக நடந்து வருகிறது. அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தான் அதிக அளவு பணம் பட்டுவாடா நடந்து வருகிறது. 


மூன்றாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கொளத்தூர் தொகுதியிலேயே பணம் கொடுக்க வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டு இருக்கிறது என்றால் திமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டது என பாஜக கூறியுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது. தமிழக மக்கள் எப்போதுமே மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ, யார் தேசியத்தின் பக்கம் நிற்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள்.

Tap to resize

Latest Videos

undefined

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மத்தியில் மோடி அவர்கள் ஆட்சி அமைக்க மாட்டார்கள் என்ற போலி பிம்பத்தை திமுக கட்டமைத்திருந்தது. அதனால், கடந்த தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் திமுக கூட்டணி பெற்ற 38 எம்.பி.க்களால் எந்த பயனும் இல்லை இதனை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே, இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள்.

திமுக கூட்டணி தோற்கப் போகிறது என்ற அச்சத்தில், ஆட்சி அதிகாரம், பண பலம், அடியாள் பலம் அனைத்தையும் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்து மூன்று நாட்களாக பணப்பட்டுவாடா தாராளமாக நடந்து வருகிறது. அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தான் அதிக அளவு பணம் பட்டுவாடா நடந்து வருகிறது. எங்கெல்லாம் பணப் பட்டுவாடா நடக்கிறதோ அங்கெல்லாம் மின்சாரத்தை நிறுத்தி வைத்து ஓட்டுப் போட பணம் கொடுத்து வருகிறார்கள். பணம் கொடுக்கும் திமுகவினருக்கு காவல்துறையினரும் உடந்தை. ரவுடிகளும் துணைக்கு வருகிறார்கள். 

மூன்றாவது முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கொளத்தூர் தொகுதியிலேயே பணம் கொடுக்க வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டு இருக்கிறது என்றால் திமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டது என்பதே பொருள். அதனை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதன் அடையாளம் தான் தொடர்ந்து நடக்கும் பணப் பட்டுவாடா.

வடசென்னை மக்களவைத் தொகுதியில், குறிப்பாக அதற்கு உட்பட்ட கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜகவுக்கு வாக்களிக்கும் மக்கள் உள்ள பகுதிகளில் அதிகமாக பணம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடியவர்கள், பணத்திற்காக வாக்களிப்பவர்கள் அல்ல, அவர்கள் நாட்டுக்காக, தேசியத்திற்காக வாக்களிக்க கூடியவர்கள். இது திமுகவினருக்கு நன்றாகத் தெரியும். எனவே, வாக்குப்பதிவு நாளன்று அவர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க பல்வேறு அராஜகங்களை கட்டவிழ்த்து விட வாய்ப்புள்ளது. அதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

தமிழக காவல்துறையினர் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே வட சென்னை மக்களவைத் தொகுதியில் குறிப்பாக  கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்கு நிறுத்த வேண்டும். இல்லையெனில், அமைதியான, நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் கூறியுள்ளார். 

click me!