
பாடி மேம்பாலத்தில் விபத்து
சென்னை மாதவரத்தில் இருந்து அண்ணாநகர் நோக்கி டாரஸ் லாரி ஒன்று மண் லோடு ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. லாரி பாடி மேம்பாலத்தில் ஏற முயன்றது. அப்போது அவ்வழியாக சரவணன் என்பவர் தனது மனைவி பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை கரோலினுடன் இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது அவர்கள் மீது லாரி மோதியது.
தலை நசுங்கி உயிரிழப்பு
இதனால் மூவரும் கீழே விழுந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி ஏறி இறங்கியதில் பிரியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயமடைந்த சரவணன் மற்றும் குழந்தை கரோலின் (1) ஆகியோர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன ஒட்டிகள் வாக்குவாதம்
மேலும் நகரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லாத போது எப்படி வருகிறது என கேட்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.