சென்னையை கிறங்கடிக்கும் கொரோனா..! சென்டிரல் ரெயில்வே காவல் நிலையம் மூடல்..!

By Manikandan S R SFirst Published May 14, 2020, 10:20 AM IST
Highlights

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 7 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.


இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2,176 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.

Latest Videos

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 7 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நாடு முழுவதும் இருக்கும் காவலர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், சாலையோரங்கள் என கிடைக்கும் இடங்களில் தங்கி இருக்கும் காவலர்களுக்கும் அண்மை காலமாக தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருக்கும் வெளி மாநிலத்தவர்களை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் போலீஸ் உள்பட 7 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ரெயில்வே போலீசார் அனைவருக்கும் பரிசோதனைகள் நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையம் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

click me!