
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் 25 வயது பெண் காவலர் ஒருவர் கடந்த பிப்ரவரி 15ம் தேதி பணி முடிந்து இரவு 10:30 மணிக்கு மேல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் ஏறியுள்ளார். பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி நடைமேடையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒருவர் பெண் காவலரின் வாயைப்பொத்தி அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் காவலர் அலறியபடி கூச்சலிட்டார். இதனையடுத்து ரயில் நிலையத்தில் இருந்த சக பயணிகள் அவரது விரட்டி பிடித்து தாக்கி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரனை செய்ததில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் சிட்லபாக்கத்தை சேர்ந்த சத்தியபாலு(40 )என்பதும், போதையில் செயின் பறிப்பில் ஈடுப்பட்டது தெரியவந்தது. மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் பெண் காவலரை கீழே தள்ளிவிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பின்னர் அந்த நபர் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சத்தியபாலு மீது பாலியல் சீண்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட சத்தியபாலுவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் போலீசார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு - பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது? சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் போதை ஆசாமி ஒருவர் செயினை பறிக்க முயற்சி செய்ததோடு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவும் தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்குவது வெட்கக் கேடானது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து இதுவரை வாய் திறக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தன் துறை சார்ந்த பெண் காவலரிடமே நடைபெற்றிருக்கும் அத்துமீறல் தொடர்பாக வாய் திறப்பாரா ? அல்லது எப்போதும் போல மவுனம் காக்க போகிறாரா?
குற்றச் சம்பவங்களை தடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறியதன் விளைவு தற்போது அத்துறையைச் சார்ந்த பெண் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதோடு ஒட்டுமொத்த காவல்துறை மீதான மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பையும் இழக்கச் செய்திருக்கிறது. எனவே, இனியாவது தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.