இத்தொகுப்பில் நாம் ஆடிப்பெருக்கு மகத்துவம் குறித்தும், ஆடி 18 ஆம் வழிபாட்டு முறை மற்றும் பிரார்த்தனை மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் பல விழாக்கள் வரும். அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆடிபெருக்கு. இந்நாளில் எல்லா ஊர் மக்களும் காவிரியாற்றங்கரையில் காவிரியன்னையை வரவேற்பர். மேலும் தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும் காவிரிதாயை தெய்வமாக வணங்கி வழிபடுவார்கள். அதுபோல் ஆடி 18ஆம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது ஐதீகம். அதனாலேயே தான் விவசாய பெருமக்களுடன் கூடி பலதரப்பு மக்களும் காவிரி தாயை வணங்குகிறார்கள். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பன்னெடுங்காலமாய் நதியை வழிபடுவது ஒரு வழக்கமாகும். குறிப்பாக தமிழகத்தில் ஆடி பெருக்கு எனும் 18 ஆம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும். அந்த நாளில் பெண்கள் காவிரியன்னை வணங்கினால் அவர்களுக்கு நல்ல கணவனையும், கணவனின் நலத்தையும் காப்பாள் என்பது நம்பிக்கை. இதற்காக தான் ஆடி 18 அன்று சுமங்கலிகளும், கன்னி பெண்களும், புத்தாடை அணிந்து ஆற்றுபடித்துறையில் நின்று பொங்கி வரும் அன்னை காவிரியை வணங்குகின்றனர். மேலும் அவளை அலங்கரிக்கும் பொருட்களையும் சமர்பிக்கின்றனர்.
இதையும் படிங்க: Aadi Perukku 2023: ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுவது ஏன்? அதன் சிறப்புகள் என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..!!
ஆடிபெருக்கு பூஜை:
ஆடிபெருக்கு பூஜையில் காதோலை, கருகமணி, காப்பரிசி ஆகியவை மிகவும் முக்கியமானது. அதுபோல் நைவேந்தியமாக சித்திர அன்னங்கள், புதுமஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் மஞ்சள் போன்றவை பூஜை பொருட்களாகும். மேலும் காவிரியாற்றின் படித்துறைகளில் பெண்கள் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி, பூஜை பொருட்கள், நெய்வேந்தியம் போன்றவைகள் வைத்தும் கற்பூரம் ஏற்றி பூஜை செய்வார்கள். அது போல் பூஜையில் வைத்த புதிய தாலிக்கயிற்றை சுமங்கலிகள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள். கன்னி பெண்களும் காவிரியன்னையை வேண்டி மஞ்சள் கயிறை அணிவது வழக்கமாகும்.
ஆடிபெருக்கு அன்று மூன்று நதிகள் கூடும் இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். மேலும் ஆற்றில், பூக்கள் மற்றும் குங்குமம் என போன்றவற்றை போட்டு வணங்குவார்கள். ஒருசிலர் வாழைமட்டையில் விளக்கேற்றி ஆற்றில் விடுவார்கள்.
இதையும் படிங்க: Aadi Velli Pooja: ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமைகளில் இப்படி பூஜை செய்யுங்கள்..தேவியின் அருள் கிடைக்கும்..!!
முளைப்பாரி விழா:
ஆடி பெருக்கு என்பது விவசாயம் தழைக்க வேண்டி நடைபெறும் ஒரு விழா என்பதால், ஆடி பெருக்கிற்கு முன்பே நவதானியங்களை மண்ணில் பரப்பி விளையவிட்டு, விளைந்த பயிர்களை ஒரு சட்டியில் வைத்து கொண்டு வந்து காவிரியாற்றின் படித்துறைகளில் வைத்து வணங்கி கும்மியடித்து பாடி, குலவையிட்டு பின் அதை ஆற்றில் இடுவார்கள். இதில் உள்ள முளை பயிர்கள் ஏதேனும் நிலப்பகுதிக்கு சென்று அங்கு நன்கு செழித்து வளரும். இவற்றின் மூலமே சென்ற பயிர்கள் வெவ்வேறு நில பகுதிகளிலும் சிறப்பாக வளரும். எனவே, ஆடி 18 பெண்களில் நல்வாழ்வையும், விவசாய பெருவாழ்வையும் வளர்க்கும் திருநாளாய் கொண்டாடப்படுகிறது.