கோயில்களில் சுவாமி சிலைகளுக்கும், லிங்கங்களுக்கும் பலவித அபிஷேகங்கள் செய்வதற்கு ஆகமங்கள் விளக்கமளிக்கின்றன.
கோயில்களில் உள்ள கடவுளின் உருவ சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதை பார்த்திருப்பீர்கள். இந்த சிற்பங்கள் சக்திவாய்ந்தவை. இவற்றை அபிஷேகத்தால் தீண்டும்போது உயிர்ப்பு சக்தியை கொடுக்குமாம். அதனால் தான் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இப்படியான அபிஷேகங்களில் இறை அழைப்பு அதிகரிக்கும். அபிஷேகத்தையே ஒருவித அழைப்பு என்றுதான் சொல்கிறார்கள். ஒவ்வொரு அபிஷேகத்திற்கு ஒவ்வொரு மாதிரியான பொருள் உண்டு தெரியுமா? அவை குறித்து அறியலாம் வாருங்கள்..
அபிஷேகத்தின் அதிசயங்கள்
பால் அபிஷேகம், தேன் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் என ஒவ்வொன்றிற்கும் ஒரு வகையான பொருளுண்டு. இறைவனுக்கு உரிய ஆராதனைகளிலேயே பல வகைகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட 16 வகையான ஆராதனைகளில் முக்கியமானது 'அபிஷேகம்' தான். அபிஷேகங்களை தமில் திருமுழுக்கு என கூறுகிறார்கள். முந்தைய காலத்தில் இறைவனின் அபிஷேகத்திற்கு கிட்டத்தட்ட 26 வகையான வாசனை திரவியங்களை பயன்படுத்தினார்களாம். ஒவ்வொரு அபிஷேகத்திற்கு தனித்தனியான ஆற்றல் இருக்கிறது.
ஏன் அபிஷேகம் செய்ய வேண்டும்?
இந்த வாசனை திரவியங்களின் எண்ணிக்கை காலப்போக்கில் 18ஆகி, இன்றைய காலத்தில் 12 வகையாக குறைந்துள்ளது. அவற்றில் எள் எண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், சுத்த ஜலம் ஆகியவை அடக்கம். இந்த அபிஷேகங்களுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அறிவியல் காரணங்கள் தான். அதாவது ஒரு கோயிலுடைய மூலவர் சிலையின் மீது அருள் வெளிப்பட அதை அபிஷேகம் செய்வது அவசியமான காரியமாக கருதப்படுகிறது. அதன் மீது செய்யப்படும் அபிஷேகங்கள் வாசனை திரவியங்களின் அளவையும் தான், எண்ணிக்கையும் பொறுத்துடான் மூலவர் சிலையின் ஆற்றல் வெளிப்படுமாம்.
சுருங்க சொல்ல வேண்டுமெனில் பேட்டரியில் சார்ஜ் ஏற்றுகிறோமே அப்படிதான் அபிஷேகங்களும், மூலவரின் ஆற்றலை மறுசீரமைப்பு செய்யவும், சக்தியை நிலைப்படுத்தவும் உதவுகிறது. இதற்கு அபிஷேகப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க கோயில் சொத்தாக நிலங்கள் எழுதிவைக்கப்பட்டனவாம்.
சிறப்பான அபிஷேகங்கள் எவை?
மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் மூன்றும் சிறந்தவை. எந்த அபிஷேகம் செய்தால் அதனை 24 நிமிடங்கள் (ஒரு நாழிகை) செய்வது அவசியம். இது ஆகம விதி. ஆனால் சில கோயில்கள் நடைமுறையில் இருநாழிகையாக செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கோயிலிலும் இருக்கும் உள்ள பிரதிஷ்டை பந்தன விதிகளை பொறுத்து மாறுபடும். அபிஷேகத்திற்கு உபயோகப்படுத்தும் தண்ணீரில் பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர் போன்றவை போட்டு சுகந்தமாக அபிஷேகம் செய்ய வேண்டும்.
பக்தர்களுக்கு அனுமதியில்லை..
முந்தைய காலத்தில் மூலவிக்ரகத்துக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் சந்தனம், விபூதி, கலச அபிஷேகம் தவிர பிறவற்றைப் பார்க்க பக்தர்களை அனுமதிக்கமாட்டார்களாம். ஆகம விதிப்படி பிற எந்த அபிஷேகத்தையும் பக்தர்கள் காணக் கூடாது. ஆனால் பல கோயில்களில் அனைத்து அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க அனுமதி உள்ளது.
பிரபஞ்ச ஆற்றல்
கோயில் கருவறையில் சிலையாக வீற்றிருக்கும் மூலவர் திருமேனி, பிரபஞ்ச ஆற்றலை ஒருங்கே ஈர்த்து கோயில் முழுக்க பரவ செய்யும். இது அபிஷேகத்தால் பெருகும். இதை நம் முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டனர். விஞ்ஞானிகள் கூட அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளனர். சில பழைய கோயில் மூலவர் சிலைகளின் பீடத்தில் அரிய மூலிகைகளும், மந்திரத் தகடும் (யந்திரம்) உள்ளன. இவை வெளிப்படுத்தும் ஆற்றல் அபிஷேகத் தீர்த்தத்தில் கலப்பதால், அதனைத் தலையில் தெளித்தாலும், அருந்தினாலும் அபரிமிதமான புத்துணர்ச்சி வரும்.
தயிர், பால், சந்தனம், தண்ணீர் போன்றவையின் அபிஷேகம் மூலவர் சிலையில் அதிக ஆற்றலைக் கடத்தும் திறன் கொண்டது. இது மட்டுமா, அபிஷேகத்தில் செய்வதால் கருவறை காற்று மண்டலத்தில் எலக்ட்ரான்கள் அளவு அதிகரிக்குமாம். இது அறிவியல் சோதனையில் உறுதியாகியுள்ளது என கூறப்படுகிறது.
அபிஷேகத்தின் பலன்கள்
அபிஷேகத்துகான பொருளை நேரடியாக கொடுப்பதைவிட அதனைச் சுமந்தபடி பிராகாரத்தில் வலம் சென்று பிறகு கொடுப்பது சிறந்தது. ஆகவே, பால் காவடி போன்றவை சுமப்பவர்கள் கோயிலை வலம் சென்ற பின் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. பிரதோஷ காலத்தில் நந்திக்கு பால் அபிஷேகம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது. முருகபெருமானுக்கு திருநீறு, பால், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது எல்லையில்லா ஆற்றல் வெளிப்படுமாம்.
இந்த மாதிரியான அபிஷேகத்தால் பக்தர்கள் வாழ்க்கையில் வளமும், நலமும் கிடைக்கிறது. இறைவனின் அருளாற்றலை கூட்டும் அற்புதமான காரியமே அபிஷேகம். அதனால் நேரம் இருக்கும்போது அபிஷேகம் காண கோயில்களுக்குச் செல்லுங்கள். அபிஷேகத்தை தரிசிக்காவிட்டாலும், கோயிலுக்குள் இருந்தாலே போதும். அது வாழ்க்கையில் பல நன்மைகளை கொண்டுவரும். இன்றைய தினம் நடக்கும் சிவராத்திரி அபிஷேக வழிபாட்டில் கூட இயன்றவரை பங்குபெறுங்கள்.
இதையும் படிங்க: மாசி அமாவாசை 2023: எப்போது? எப்படி விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கி முழுப்பலன் கிடைக்கும்..
இதையும் படிங்க: மகா சிவராத்திரி அன்று வரும் சனிப் பிரதோஷம்.. இப்படி வழிபட்டால் ஈசன் இரட்டிப்பு பலன்களை வாரி வழங்குவார்