
தமிழகத்தில் சமீப காலமாக 'வராஹி அம்மன்' வழிபாடு அதிகமானவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், கேட்டவுடன் வரம் தரும் அதீத சக்தியாக வராஹி அம்மன் திகழ்கிறாள். பஞ்சமி திதி வாராஹிக்கு உரியதாக கருதப்படுகிறது. வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டு பஞ்சமி திதிகளிலும் பக்தர்கள் பலர் விரதம் இருந்து, வராஹியை வழிபடுகிறார்கள். பொதுவாக பஞ்சமி என்றால் வாராஹிக்குத் தேங்காய் பூ அல்லது மாதுளை முத்துக்களைப் படைத்து வழிபடுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் வராஹியின் அருளை விரைவாக பெறுவதற்கு இன்னும் சில வழிபாடுகள் உள்ளன. இதுவரை இது பற்றி உங்களுக்கு தெரியாது என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்வை மாற்றும் 4 சக்தி வாய்ந்த ரகசிய வழிபாடுகள் :
1. பஞ்சமி திதி கரசியம் :
ஜோதிட சாஸ்திரப்படி, பஞ்சமி திதி என்பது மனதிற்கு அதிபதியான சந்திரனும், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமியும் கைகோர்க்கும் நாள். வளர்பிறை பஞ்சமியில் சந்திரன் மெல்ல மெல்லப் பொலிவு பெறுவது போல, அன்று நாம் தொடங்கும் காரியங்களும், செய்யும் வழிபாடும் நம் வாழ்க்கையைப் படிப்படியாக உச்சத்திற்குக் கொண்டு செல்லும். பலர் அறியாத ஒரு தகவல் என்னவென்றால், பஞ்சமி திதி அன்று தான் 'நாகலோகத்தின்' கதவுகள் திறக்கப்படுவதாக ஐதீகம். எனவே தான், அன்று செய்யப்படும் நாக வழிபாடு, ராகு-கேது தோஷங்களை நீக்கி, வம்ச விருத்தியை ஏற்படுத்துகிறது.
2. 'பஞ்சமி தீப' ரகசியம் :
உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கவும், கடன் தொல்லை தீரவும் ஒரு அபூர்வ தீப முறையைச் சித்தர்கள் சொல்லி உள்ளனர். வளர்பிறை பஞ்சமி அன்று மாலை பிரதோஷ நேரத்திற்குப் பிறகு (சுமார் 6:00 மணி முதல் 8:00 மணி வரை), ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை கற்பூரம், ஏலக்காய் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து பூசிய பஞ்சுத் திரியைப் போடவும். சுத்தமான பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி, அதன் முன் அமர்ந்து "ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் வராக முகி ஸர்வார்த்த ஸாதகி வர வரஹே மாம் ரக்ஷ ரக்ஷ" என்ற மூல மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும். மகாலட்சுமிக்கு விருப்பமான மண் அகல் விளக்கு, பச்சை கற்பூரம், ஏலக்காய், மஞ்சள் தூள், பசு நெய் ஆகிய 5 பொருட்களை கொண்டு தொடர்ந்து ஐந்து பஞ்சமிக்கு விளக்கேற்றி வந்தால், இழுபறியில் இருந்த சொத்து விவகாரங்கள் மற்றும் கோர்ட் வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.
3. வெற்றி தரும் வராஹி வழிபாடு :
வராஹி அன்னைக்கு 'செங்கழுநீர்'மலர்கள் என்றால் மிகவும் பிரியம். ஆனால், பலருக்கும் இது கிடைப்பதில்லை. அதற்கு மாற்றாக, சிவப்பு நிற மலர்கள் அணிவித்து, பஞ்சமி அன்று 'வெள்ளை மொச்சை' தானியத்தை வேக வைத்து, அதில் வெல்லம் கலந்து நிவேதனம் செய்வது, உங்கள் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும். குறிப்பாக, அலுவலகத்தில் 'பாலிடிக்ஸ்' காரணமாகத் துன்பப்படுபவர்கள், இந்த மொச்சை நைவேத்தியத்தை வராஹிக்கு படைத்து பக்தர்களுக்கு விநியோகித்தால், உயர் அதிகாரிகளின் ஆதரவு தானாகத் தேடி வரும். அலுவலகத்தில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
4. பூமி பூஜைக்கு ஏற்ற நாள் :
வராஹி அம்மன் பூமாதேவியின் அம்சம். எனவே, வளர்பிறை பஞ்சமி அன்று புது வீடு குடியேறுவது, நிலம் வாங்குவதற்கான அட்வான்ஸ் கொடுப்பது அல்லது பூமி பூஜை செய்வது அந்த நிலத்தில் செல்வத்தை நிலைக்கச் செய்யும். பஞ்சமி திதி அன்று உங்கள் வீட்டின் ஈசான்ய மூலையில் (வடகிழக்கு) ஒரு செம்பில் நீர் நிரப்பி, அதில் ஒரு வெற்றிலை வைத்து வழிபட, வாஸ்து தோஷங்கள் விலகி லட்சுமி கடாட்சம் பெருகும்.
பஞ்சமியில் செய்யக் கூடாதவை :
வளர்பிறை பஞ்சமி அன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அது உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை வெளியேற்றும் செயலாகக் கருதப்படுகிறது. அதேபோல், கோபப்பட்டு அடுத்தவர்களைச் சபிப்பதோ அல்லது தரக் குறைவாகப் பேசுவதோ உங்கள் பிரார்த்தனையின் பலனை அழித்துவிடும். அதே போல் மற்ற உயிரினங்களை துன்புறுத்தும் செயல்களை இந்த நாளில் செய்வதும் வராஹி அன்னையின் கோபத்திற்கு ஆளாக்கி விடும்.