
Vaikasi Visakha in Tiruchendur today; Special worship! முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவானது இன்று (ஜூன்.9) திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
வைகாசி விசாகம் என்றால் என்ன?
வைகாசி விசாகம் என்பது முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். அதாவது வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று தான் மிருகப் பெருமான் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆகவே வைகாசி விசாக நாளில் முருகப்பெருமானை மனதார வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்:
இந்த திருவிழாவை முன்னிட்டு கோவிலின் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 விஸ்வரூப தீப ஆராதனை, காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால தீப ஆராதனை, மாலை 4 மணிக்கு சாய ரட்ச தீப ஆராதனை நடக்கும். அதன் பிறகு சுவாமி ஜெயந்திநாதர் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அங்குதான் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவம் நடைபெறும். இறுதியாக இரவு 7 15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.
திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருச்செந்தூர் முழுவதும் விழாக்களமாக காணப்படுகிறது. முருகப்பெருமானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார வசதிகள், நிழல் குடைகள் , மருத்துவ முகாம்கள் போன்றவை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.