உலகப்புகழ்பெற்ற ஆழிதேர் திருவிழா; பக்தர்களின் வெள்ளத்தில் அழகுற ஆடி அசைந்து வரும் திருவாரூர் தேர்

By Velmurugan s  |  First Published Mar 21, 2024, 11:55 AM IST

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா இன்று காலை தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான வடம் பிடித்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.


சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும் கோவில்களின் கோவில் என போற்றப்படுவதும், பூமிக்குரிய ஸ்தலமாகவும் விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம் தொன்மை சிறப்புவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக நம்பப்படுகிறது. இவ்வாலயத்தின் வருடாந்திர திருவிழா பங்குனி பெருவிழாவாக அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு இவ்வாலயத்தின் திருவிழா நடைபெறுவது தனிச்சிறப்பு.  அதன்படி பங்குனி ஆயில்ய நட்சத்திர நாளான இன்று ஆழித்தேரோட்டம் ஆலய ஆகமவிதிபடி நடைபெற்று வருகிறது.    

Latest Videos

கோவில், குளம் என இவ்வாலயத்தின் தொன்மையை வெளிகொணர்ந்தாலும் உலக அளவில் திருவாரூரூக்கு பெருமை சேர்ப்பது இவ்வாலயத்திற்கு உரித்தான ஆழித்தேர். பொதுவாக இந்து சமய ஆலயங்களில் நடைபெறும் விழாக்களில் தேரோட்ட விழா என அழைக்கப்படும் நிலையில், திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய தேர்திருவிழாவினை மட்டும்தான் ஆழித்தேரோட்டம் என அழைக்கப்படக்கூடிய தனிசிறப்பு. இதற்கு முக்கிய காரணம் பொதுவாக காணப்படும் தேர்களின் வடிவமைப்பினை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமாக காணப்படுவதால் திருவாரூர் தேரை ஆழி என அடைமொழியோடு அழைக்கப்படுகிறது.

மக்களுக்கு எதிரான பாஜகவின் அனைத்து மசோதாகளுக்கும் வாக்களித்தது அதிமுக - கனிமொழி காட்டம்

ஆன்மிகத்திற்கு அப்பாற்பட்டு உலக அரங்கில் பேசப்படும் திருவாரூர் ஆழித்தேரானது அதனுடைய மரபீடத்தின் வடிவமைப்பும், அதில் காணும் 500க்கும் மேற்பட்ட கலைநயமிக்க சிற்பங்களும், எண்கோண வடிவில் குறுக்கு வெட்டு தோற்றத்தில் 20 பட்டைகளாக இத்தேர் வடிவமைப்பும் ஆழித்தேர் கட்டுமாணத்தின் இலக்கணமாக இருந்துவருகிறது. பெருமைமிகு ஆழித்தேர் பற்றியும் தேர் அசைந்துவரும் அழகை பற்றியும் தேவாரங்களிலும், பெரிய புராணத்திலும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

96 அடி உயரமும், 450 டன் எடையும் கொண்ட பிரமாண்டமாக ஆழித்தேர் விதியினை ஆக்கிரமித்து நிற்க தேரின் முன்பக்கம் பிரமாண்ட வகையில் வடிவமைக்கப்பட்ட 4 குதிரைகள் 4 வேதங்களை மையமாககொண்டு கட்டப்பட்டு தேரையொட்டும் சாரதியாக பிரம்மா அமர்ந்து தேரை ஆலயத்தின் பிரதான 4 ராஜவீதிகளிலும் கொண்டு செல்வதாக ஐதீகத்தின்படி தேரில் காட்சிபடுத்தப்பட்டு தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தல்னா என்ன? நாடாளுமன்ற தேர்தனா என்னனு தெரியுமா? அண்ணாமலைக்கு அமைச்சர் கேள்வி

சுமார் 450 டன் எடையளவு கொண்ட ஆழித்தேர் வீதிகளில் பக்தர்கள் பக்தி பரவசத்துட்ன இழுத்து செல்ல ஏதுவாக 4 டன் எடையளவு கொண்ட 500 அடி நீளம் கொண்ட 4 பிரமாண்டமான வடங்கள் கட்டப்பட்டுள்ளதோடு,  தேர் சக்கரங்களை உந்த செய்யும் வகையில் 2 புல்டோசர் இயந்திரங்களும் தேரோட்டத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், புல்டோசர் இயந்திரம் உள்ளிட்டவை தேரோட்டத்தில் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில் தேர் வீதிகளில் சீராக செல்லும் வகையிலும், தேர் வீதிகளில் செல்லும்போது அதன் வேகத்தை முறைப்படுத்திடவும் தேரின் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டு உள்ளது.  தேரோட்டத்திற்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், தேர் வீதியின் மையமாக செல்ல ஏதுவாக தேர்கொத்தனார்கள் மரத்திலான முட்டுகட்டைகளை தேர் சக்கரங்களின் அடியில் வைத்து முறைப்படுத்தி வருகின்றனர்.

ஆழித்தேரோட்டத்திற்கு முன்னதாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேர் வடம்பிடிக்கப்பட்டது.  ஆழித்தேருக்கு பின்னதாக அம்பாள் ஸ்ரீநீலோத்பலாம்பாள் தேரும், அதனை தொடர்ந்து ஸ்ரீசண்டிகேஸ்வர சுவாமி தேர் வடம்பிடிக்கப்பட்டு ஒரே நாளில் 5 தேர்கள் ஆலய வீதிகளில் வலம் வருவதை இலட்சக்கணக்கான பக்தர்கள்  கண்டுகளித்து தேர்களில் அருள்பாலிக்கும் இறைவனை வணங்கி வருகின்றனர்.

காலை 8.50 மணிக்கு வடம்பிடிக்கப்பட்ட ஆழித்தேர் இன்று இரவு நிலையடி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சுமார் 2000க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆழித்தேரோட்டதையொட்டி இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

click me!