தை அமாவாசை 2025 : தர்ப்பணம், படையல் போட உகந்த நேரம் எது?

தை அமாவாசை முன்னோர்களை வழிபடவும், புனித நீராடவும், தானங்கள் செய்யவும் சிறந்த நாளாகும். இது பல தலைமுறைகளின் பாவங்களை நீக்குவதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 29 அன்று வருகிறது.


ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை விரதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் தை அமாவாசை மிகவும் சிறப்புவாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த அமாவாசையில் முன்னோர்களை வழிபடுவது, புனித நீராடுவது, தானங்கள் செய்வது ஆகியவற்றின் மூலம் பல தலைமுறைகளின் பாவங்களில் இருந்து விடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.

தை அமாவாசை என்ன சிறப்பு?

Latest Videos

தேவர்களின் விடியற்காலை பொழுதாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. அதே போல் தை மாதம் என்பது தேவர்களின் பொழுது விடிய தொடங்கும் பொழுதாகும். தேவர்களுக்கு சூரிய உதய காலமாக இருக்கும் தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்புமிக்கதாகும்.

இந்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி, அதாவது நாளை தை அமாவாசை வருகிறது. ஜனவரி 28-ம் தேதி இரவு 8.10 முதல் ஜனவரி 29 இரவு 7.21 வரை அமாவாசை திதி உள்ளது. காசி, கயா ஆகிய இடங்கள் முன்னோர்களுக்கு முக்தி கிடைக்க திதி கொடுக்க ஏற்ற இடங்களாக கருதப்படுகிறது.

காசியில் சிவபெருமானையும், கயாவில் பெருமாளையும் சாட்சியாக வைத்து முன்னோர்களுக்கு பிண்ட தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. சூரிய உதயத்திற்கு பிறகு நீராடி விட்டு பின்னர் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது

காலை 6.00 முதல் 7.20 வரை

காலை 9.00 முதல் 11.55 வரை

நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்பணம் கொடுக்கலாம்.

படையல் போட சரியான நேரம் எது?

அமாவாசைக்கு படையல் போடும் போது வீட்டின் பூஜையறையில் படையல் போடக்கூடாது. ஹாலில் முன்னோர்களின் படத்தை வைத்து, படையல் போடலாம். பின்னர் காகத்திற்கு சாதம் வைத்து வழிபட்ட பின்னரே அமாவாசை விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும். மதியம் 1.30 முதல் 2.00 மணி வரை படையல் போட உகந்த நேரமாகும். அமாவாசை அன்று குறைந்தபட்சம் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை.

தை அமாவாசை அன்று முடிந்தால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முன்னோர்கள் மோட்ச கதியை அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு விளக்கேற்றலாம். ஒருவேளை கோயிலுக்கு செல்ல முடியவில்லை எனில் வீட்டின் பூஜையறையில் வழக்கமாக ஏற்றும் விளக்குடன் சேர்த்தோ அல்லது முன்னோர்களின் படத்திற்கு முன்போ அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி  கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

click me!