
சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு அரவணா பாயாசம் தவிர மேலும் மூன்று வகை பாயாசங்கள் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன. அவை இடித்துப் பிழிந்த பாயாசம், எள்ளு பாயாசம் மற்றும் வெள்ள நைவேத்தியம். காலை 7.30 மணிக்கு நடைபெறும் உஷத் பூஜையின்போது இடித்துப் பிழிந்த பாயாசம் படைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல், தேங்காயை இடித்துப் பிழிந்து முதல் மற்றும் இரண்டாம் பாலை எடுத்து, வெல்லம் சேர்த்து இந்த பாயாசம் தயாரிக்கப்படுகிறது.
அரவணா பாயாசம் மதியம் 12 மணி உச்ச பூஜைக்கு உரியது. வெள்ள நைவேத்தியம் அனைத்து பூஜைகளின்போதும் பகவானுக்குப் படைக்கப்படும். எள்ளு பாயாசம் இரவு 9.15 மணி அத்தாழ பூஜைக்கு உரியது. எள்ளு பாயாசம் என்பது உண்மையில் பாயாச வடிவில் அல்ல, அது எள்ளாகவே படைக்கப்படுகிறது. அத்தாழ பூஜைக்கு பானகம் என்ற பானமும், அப்பம், அடையும் ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. சீரகம், வெல்லம், சுக்கு, மிளகு சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட கஷாய கலவையே பானகம்.
அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்போது நடைபெறும் அபிஷேகத்திற்கு பஞ்சாமிர்தம் பயன்படுத்தப்படுகிறது. கற்கண்டு, வெல்லம், கதளி பழம், உலர் திராட்சை, நெய், தேன், ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி என எட்டு வகையான பொருட்களைக் கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. பாயாசங்களில் அரவணா மற்றும் பஞ்சாமிர்தம் மட்டுமே சபரிமலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு அரவணா டின்னின் பாதி அளவுள்ள பாட்டிலில் கிடைக்கும் பஞ்சாமிர்தத்தின் விலை ரூ.125 ஆகும்.
நியதிகளைத் தெரிந்துகொள்வது போன்றே ஐயனின் அருள பெற்ற பிரசாத மகிமையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சுவாமி ஐயப்பன் சபரி மலை என்றதும் நம் நினைவுக்கு வரும் பிரசாதங்கள் அரவணைப் பாயசமும், அபிஷேக நெய்யும்தான். அப்பமும், பானகமும்கூட சபரியில் நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஐயனின் தரிசனத்தால் தித்திப்பான வாழ்க்கை வரமாகக் கிடைக்கும் என்பதையே அரவணைப் பாயசம் குறிக்கிறது எனலாம். அதேபோல், ஐயப்பமார்கள் எல்லோரும் ஐயனின் பேரருள் பிரசாத மாகக் கருதுவது அபிஷேக நெய்யைத்தான்! சபரிமலை சென்றால் பிரசாதத்துடன் நிம்மதி சந்தோஷம் மற்றும் ஐயப்பனின் அருள் கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது உண்மையே.