நம் வீட்டு பூஜை அறையில் உள்ள தெய்வங்கள் உயிரோட்டமாக இருக்கவும், வீட்டில் தெய்வ சக்தி பரவவும் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
நம் வீட்டு பூஜை அறையை விதவிதமான விளக்குகள், பூக்களால் அலங்காரம் செய்யலாம். ஆனாலும் சில விஷயங்களை பின்பற்றவில்லை என்றால் நம் வீட்டு தெய்வங்களின் படங்களிலும், சிலைகளிலும் எந்த உயிரோட்டமும் இல்லாமல் போய்விடும். உண்மையான பக்தியில் இறைவனை வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயமாக இதனை புரிந்து கொள்ள முடியும். நம் வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு உயிரோட்டம் இல்லையென்றால் நாம் பூஜை செய்யும் போது எந்த பலன்களும் இருக்காது. பூஜை செய்யும்போது மனதிலும் திருப்தி வராது.
ஆனால் நாம் முறையாக பூஜை செய்யும் போதும், பூஜை அறையை சாஸ்திர விதிகளின்படி பராமரிக்கும் போதும் தெய்வங்களுடைய உருவப்படங்கள் நம்முடன் பேசுவது போல உணர்வு ஏற்படும். தெய்வங்களின் திருவுருவப்படங்களில் இருக்கும் கண்களை காணும் போது அதில் உள்ள உயிரோட்டத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நம்முடன் கடவுளே வந்து அமர்ந்து இருப்பது போல உணர்வு ஏற்படும். ஆனால் நம் வீட்டில் இறைவனுடைய சக்தி இல்லாமல் போனால் இந்த மாதிரி உணர்வு ஏற்படாது. ஒவ்வொரு முறை பூஜை செய்யும் போதும் மனதில் சஞ்சலமும், குழப்பமும் மட்டுமே நீடிக்கும். நம் வீட்டில் இறை சக்தி இல்லாமல் போவதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வாரமும் கட்டாயமாக கல் உப்பு போட்ட தண்ணீரில் பூஜை அறையை சுத்தமாக துடைக்க வேண்டும். பின்னர் தூய்மையான நீரில் பூஜை அறையில் மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும். யாரேனும் நம்முடைய பூஜை அறையை பார்த்து கண் திருஷ்டி வைத்தால் அங்கு எதிர்மறையாற்றல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனை சரி செய்ய கல் உப்பு கலந்த தண்ணீரில் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும்.
நம் வீட்டு பூஜையறையில் நூலாம்படை, ஒட்டடை ஏற்படுத்தும் சிலந்தி கட்டாயம் வசிக்கக் கூடாது. சுத்தமாக இருக்கவேண்டும். வாடிய பூக்களை பூஜையறையில் வைக்கவே கூடாது. தினமும் பூஜையறையில் பூக்களை மாற்ற வேண்டும். ஒருவேளை புதிய பூக்களை வைக்க முடியாவிட்டாலும் வாடிய பூக்களை பூஜையறையில் உள்ள படங்களில் இருந்து நீக்கிவிடுங்கள்.
நாள்தோறும் பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரை மாற்றி புதிய தண்ணீரை வைக்கவேண்டும். இந்த புது தண்ணீரில் 1 துளசி இலை, 1 சிட்டிகை பச்சை கற்பூரம் போட்டால் கடவுளுக்கு பிடிக்கும். இதனால் பூஜை அறைக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கும். பூஜை அறையில் உள்ள தெய்வசக்தி உயிரோட்டமாக இருக்க இந்த வாசனை அவசியம். நாள்தோறும் குளித்த உடனே பூஜை அறையில் விளக்கு ஏற்றிவிடுங்கள்.
குறிப்பாக தீட்டு காலத்தில் அல்லது தீட்டுப்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவர்கள் குளிக்காமல் பூஜை அறைக்கு போகவே கூடாது. பெண்களுக்கு மாதவிடாய் வந்தால் அப்போது பூஜையறையை மூடி வைக்க வேண்டும். நீங்கள் வெளியே செல்லும்போது உறவினர் அல்லது தெரிந்தவர் வீட்டில் சுப தீட்டு அல்லது அசுப தீட்டு இருக்கலாம். அதனால் நீங்கள் வீட்டுக்கு வந்ததும் கட்டாயம் குளித்த பின்னரே பூஜை அறையை தொட வேண்டும் என்கிறது சாஸ்திரம். வீட்டில் மற்ற பகுதிக்கும் குளித்த பின்னரே செல்ல வேண்டும்.
இப்போதெல்லாம் எல்லோருடைய வீட்டிலும் ஆங்காங்கே தலைமுடி கிடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் பூஜை அறையில் ஒரு முடி கூட அப்படி கிடைக்கக் கூடாது. பூஜை அறை எப்போதும் சிறு துரும்பு கூட இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறையில் இங்கு சொன்னது போல சுத்தம் செய்து தொடர்ந்து பூஜை செய்து வரும்போது நிச்சயம் மாற்றங்களை நீங்கள் உணர முடியும். நம்முடைய பூஜை அறையில் இறைவன் வசிக்கிறான் என்ற நம்பிக்கையோடு மனது நிறைய பக்தியோடு வழிபாடு செய்யுங்கள். கடமைக்காக வீட்டை சுத்தம் செய்வதும், பூஜை அறையில் விளக்கு ஏற்றுவதும் எந்த பலனையும் தராது. கவனமாக இருங்கள். பக்தியாக வழிபடுங்கள்.
இதையும் படிங்க: மயானமே மாளிகை! சாம்பல் பூசி நிர்வாணமாக திரியும் அகோரிகளின்.. திகிலூட்டும் வாழ்க்கையை பற்றி தெரியுமா?