Krishna Jayanthi 2025: இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 15 ஆ? 16 ஆ? என்றைக்கு கொண்டாட வேண்டும்..பூஜை மற்றும் விரத முறைகள்

Published : Aug 15, 2025, 10:49 AM ISTUpdated : Aug 15, 2025, 10:53 AM IST
Lord Krishna - Krishna Jayanthi 2025 Tamil

சுருக்கம்

Krishna Jayanthi 2025: இந்துக்களின் முக்கிய பண்டிகையாக விளங்கும் கிருஷ்ண ஜெயந்தியை இந்த வருடம் எந்த தினத்தில் கொண்டாடுவது என்ற குழப்பங்கள் எழுந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Krishna Jayanthi 2025 Date

கிருஷ்ண ஜெயந்தி இந்துக்கள் கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகை ஆகும். இந்த நாள் இந்து மதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பண்டிகையை மக்கள் உற்சாகத்துடனும், பக்தியுடனும் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணருக்கு பிடித்த பக்ஷணங்கள் வாங்கி வந்து, கிருஷ்ணரின் சிலையை அலங்கரித்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். குறிப்பாக புதிதாக குழந்தை பிறந்த புதுமண தம்பதிகள் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் போல் வேடமிட்டு இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த புனித விழாவானது கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்து விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபடும் முறையாகும்.

கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாட வேண்டும்?

கிருஷ்ணரின் பிறப்பிடம் என்று கூறப்படும் மதுராவிலும், குஜராத், ராஜஸ்தான், அஸ்ஸாம், மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜன்மாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, கோகுலாஷ்டமி, அஷ்டமி ரோகிணி, கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ஜெயந்தி என பல்வேறு பெயர்களில் இந்திய மக்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடப்படும் என நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பலரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என கூறி வருகின்றனர். இது குறித்த குழப்பம் நீடித்து வரும் நிலையில், எந்த தேதியில் கொண்டாட வேண்டும்? மற்றும் பூஜை நேரங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 16 ஆம் தேதி பொருத்தமாக இருக்கும்

பாத்ரபட மாதா கிருஷ்ணபக்ஷத்தின் எட்டாம் நாளில் அதாவது அஷ்டமியில் ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ணரின் அவதார திருநாள் ஆகஸ்ட் 16, 2025 சனிக்கிழமை அன்று பகவான் கிருஷ்ணரின் 5252-வது பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி அஷ்டமி திதி நாள் முழுவதும் இருக்கிறது. அதிகாலை 1:41 மணிக்குத் தொடங்கி இரவு 11:13 வரை நீடிக்கிறது. பெரும்பாலான ஆன்மீக மரபுகள் மற்றும் பஞ்சாங்கங்களின்படி கிருஷ்ண ஜெயந்தி அஷ்டமி திதியை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 16, 2025 சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுவது பொருத்தமாக இருக்கும். சிலர் ரோகிணி நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவர்.

பூஜை செய்ய உகந்த நேரம்

ரோகிணி நட்சத்திரத்தின் படி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுபவர்களுக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி பொருத்தமான நாளாக இருக்கும். ஏனெனில் கிருஷ்ணா மதுராவில் பிறந்து மறுநாள் கோகுலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்த இரண்டு நாட்களுமே வழிபாட்டிற்கு ஏற்ற நாட்கள்தான். ஆனால் பரவலாக ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு பொதுவாக மாலை அல்லது இரவு நேரத்தில் செய்யப்படுகிறது. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாலை நேரம் பூஜைக்கு உகந்த நேரம் ஆகும். மாலை 6:00 மணி முதல் 9:41 மணி வரை அஷ்டமி திதி நிலவுவதால் இந்த நேரம் பூஜை செய்ய நல்ல நேரமாகும். மாலையில் பூஜை செய்ய விரும்புபவர்கள் மதியம் 3:01 மணி முதல் 5:45 மணி வரை பூஜை செய்யலாம்.

கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்யும் முறை

மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை எமகண்டம் இருப்பதால் இந்த நேரத்தில் பூஜை செய்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவால் மாக்கோலம் இட்டு, கிருஷ்ணர் பாதங்களை அரிசி மாவால் வாசல் முதல் பூஜை அறை வரை வரையவும். இது கிருஷ்ணர் வீட்டிற்கு வருவதைக் குறிக்கும். பூஜை அறையை மலர்களால் அலங்கரிக்கவும். கிருஷ்ணர் தவழும் வண்ணம் இருக்கும் பொம்மைகள், புகைப்படங்கள் அல்லது சிலைகளை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். கிருஷ்ணருக்கு பிடித்த பொருட்களான வெண்ணெய், தயிர், பால், மோர், அவல், சர்க்கரை, முறுக்கு, சீடை, அதிரசம், லட்டு, தேன்குழல் ஆகியவற்றை படைக்க வேண்டும். கிருஷ்ணரின் நாமங்களையும் கிருஷ்ண மந்திரங்களையும் 108 முறை ஜெபிக்கவும்.

இறைவன் அவதரித்த திருநாள

மாலை 6 மணிக்கு மேல் விளக்கு ஏற்றி கிருஷ்ணருக்கு தீப தூப ஆராதனைகள் காட்டவும். பக்தி பாடல்கள், பஜனைகள் கிருஷ்ணரின் கதைகளை குழந்தைகளுக்கு கூறவும். மறுநாள் காலை கற்பூர ஆரத்தி காட்டி விரதத்தை நிறைவு செய்யலாம். இந்த கிருஷ்ண ஜெயந்தி வெறும் பிறந்த நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. இது பக்தி, தர்மம், அன்பு, ஒழுக்கம் போன்ற உயர்ந்த கொள்கைகளை நினைவூட்டும் ஒரு திருநாளாகும். மதுராவில் வசுதேவர் தேவகிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்து கம்சனின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து மக்களை காக்க அவதரித்த இறைவனின் திருநாள் ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபடுவது, நம் பாவங்களை நீக்கி, கர்ம வினைகளை போக்கி, குழந்தைப் பேறு செல்வம் மற்றும் மன அமைதியை வழங்கும் என நம்பப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!