காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக சாதுக்கள் அதிகம் வசிக்கும் இடம் திருவண்ணாமலையாகும்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தங்கி உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்களின் கைரேகைகள் மற்றும் முழு விவரங்கள் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கம். அந்த கிரிவலம் செல்லும் பாதையில் சாதுக்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக சாதுக்கள் அதிகம் வசிக்கும் இடம் திருவண்ணாமலையாகும்.
இந்த கிரிவலப் பாதையின் சாலையின் இரு புறங்களிலும் பல்வேறு மாவட்ட மாநிலங்களைச் சேர்ந்த சாதுக்கள் தங்கி கிரிவலம் வரும் பக்தர்களிடம் யாசகம் பெற்று கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமங்கள் தொண்டு நிறுவனத்தினர் கொடுக்கும் உணவை உண்டு அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். திருவண்ணாமலையில் விசேஷ தினங்களாக கருதப்படும் பவுர்ணமி மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது புதிய சன்னியாசிகள் சாதுக்கள் என பலர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கிரிவலப் பாதையில் தங்கி உள்ள சாதுக்கள் குறித்து முழு தகவல்களையும் காவல்துறையினர் சேகரித்த நிலையில் தற்போது பவுர்ணமி தினங்களில் இங்கு வந்து யாசகம் பெற்று திரும்பி செல்லும் சாதுக்களின் முழு தகவல்கள் கைரேகைகள் பதிவு செய்யும் பணி காவல்துறையின் சார்பில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்கள் கிரிவலப் பாதைக்கு வந்து செல்லும் நிலையில் தற்பொழுது 200க்கும் மேற்பட்ட சாதுக்களின் கைரேகைகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது சாதுக்கள் போர்வையில் இங்கு குற்றவாளிகள் மறைந்துள்ளனரா? அல்லது இவர்கள் உண்மையான சதுக்களா? என கண்டறிய இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து சாதுக்களின் கைரேகைகளும் முழு விவரங்களும் பதிவு செய்யப்பட்டவுடன் சாதுக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என்றும் தெரிவித்தனர்.