
ஆண்டுதோறும் வரும் 12 பௌர்ணமிகளுள் மிகவும் மகத்துவமானது சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி. அன்று நிலவு தனது முழுப் பொலிவுடன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். பொதுவாக பௌர்ணமி என்றாலே அம்மன் வழிபாடு தான் நினைவுக்கு வரும். ஆனால் சித்ரா பௌர்ணமிக்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது தான் "சித்ரகுப்தர் வழிபாடு". நம்முடைய புண்ணிய மற்றும் பாவக் கணக்குகளை எழுதும் அந்த 'தேவலோகக் கணக்கப்பிள்ளை' சித்ரகுப்தரை எப்படி வழிபட வேண்டும்? ஏன் வழிபட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சித்ரா பெளர்ணமியில் செய்ய வேண்டிய சித்ரகுப்தர் வழிபாடு :
1. யார் இந்த சித்ரகுப்தர்?
புராணங்களின்படி, எமதர்ம ராஜாவுக்கு உதவி செய்ய ஒரு கணக்காளர் தேவைப்பட்ட போது, பிரம்மதேவர் தனது மனதிலிருந்து (சித்தம்) ஒருவரை உருவாக்கினார். அவர் கையில் ஏடும், எழுத்தாணியுடனும் தோன்றியதால் 'சித்ரகுப்தர்' (மறைவாக இருந்து சித்திரம் வரைபவர்) என்று அழைக்கப்பட்டார். மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இவர் பசுவின் வயிற்றிலிருந்து (காமதேனு) தோன்றியவர் என்றும், அதனால் தான் இவருக்குப் பசுவின் பால் மற்றும் தயிர் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் பிடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மனிதர்களின் பாவம் மற்றும் புண்ணியக் கணக்குகளை எழுதும் எமதர்மனின் கணக்கராக அறியப்படும் இவர், சிவ-பார்வதியால் உருவாக்கப்பட்டவர் என்றும் சிலர் புராண கதைகளில் சொல்லுவது உண்டு.
2. சித்ரகுப்தர் பூஜையின் முக்கியத்துவம் :
நாம் செய்யும் ஒவ்வொரு சிறு தவறும், நன்மையும் சித்ரகுப்தரின் கணக்கில் பதிவாகிறது. சித்ரா பௌர்ணமி அன்று அவரை மனமுருகி வழிபட்டால், நாம் செய்த அறியாத பாவங்களின் வீரியம் குறையும் என்பதும், நற்காரியங்கள் செய்ய வேண்டும் என்ற புத்தி பிறக்கும் என்பதும் ஐதீகம். நம்முடைய கர்மவினைகள் குறைந்து, வாழ்வை புதுப்பித்துக் கொள்ளும் நாளாகவும் சித்ரா பெளர்ணமி தினம் கருதப்படுகிறது.சித்ரா பவுர்ணமி அல்லது தீபாவளிக்கு அடுத்த கார்த்திகை மாத துவிதியை திதி ஆகியவை சித்ரகுப்த பூஜை செய்வதற்கு மிகவும் உகந்த நாட்களாக கருதப்படுகின்றன.
3. பூஜை செய்வது எப்படி?
வீட்டைச் சுத்தம் செய்தல்: சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலையிலேயே வீட்டைச் சுத்தம் செய்து, நிலை வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
கோலம்: பூஜையறையில் சித்ரகுப்தருக்காக ஒரு சிறிய மனையில் பச்சரிசி மாவில் ஏடு மற்றும் எழுத்தாணி போன்ற கோலம் போட வேண்டும்.
படைக்க வேண்டியவை: சித்ரகுப்தருக்கு மிகவும் பிடித்தது சர்க்கரைப் பொங்கல் மற்றும் நீர் மோர். மேலும், கலவை சாதங்கள் (புளியோதரை, எலுமிச்சை சாதம்) வைப்பதும் சிறப்பு.
தவிர்க்க வேண்டியவை: முக்கியமாக சித்ரகுப்தர் பூஜையில் அன்று பசுவின் பால் மற்றும் பால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்பது ஒரு சூட்சுமமான விதி.அவர் காமதேனுவின் மைந்தன் என்பதால், தாய்ப்பாலுக்கு மரியாதை தரும் விதமாக இந்தப் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் எருமைப் பால் பயன்படுத்தலாம் என்பது சில ஊர் வழக்கம்.
4. தானத்தின் மகத்துவம் : சித்ரா பௌர்ணமி அன்று குடை, செருப்பு, விசிறி மற்றும் அன்னதானம் செய்வது மிகச்சிறந்த பலனைத் தரும். குறிப்பாக ஏழை மாணவர்களுக்குப் புத்தகம், பேனா (எழுத்தாணிக்கு அடையாளமாக) தானம் செய்வது உங்கள் குடும்பத்தின் கல்வித் தடையை நீக்கும்.
5. "சித்ரகுப்தர் காயத்ரி" பூஜையின் போது சித்ரகுப்தர் காயத்ரி மந்திரத்தைச் சொல்வது இரட்டிப்பு பலன் தரும்:
"ஓம் தத்புருஷாய வித்மஹே சித்ரகுப்தாய தீமஹி தன்னோ லேகக: ப்ரசோதயாத்"
இந்த மந்திரத்தை 108 முறை சொல்வது உங்கள் கர்ம வினைகளைக் குறைக்க உதவும்.
6. எங்கு சென்று வழிபடலாம்? இந்தியாவிலேயே சித்ரகுப்தருக்குத் தனிக் கோயில் இருப்பது நம் தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் தான். சித்ரா பௌர்ணமி அன்று அங்குச் செல்வது மிக விசேஷம். இயலாதவர்கள் உங்கள் ஊரில் உள்ள எமதர்ம ராஜாவின் சன்னதியிலோ அல்லது சிவன் கோயிலிலோ வழிபடலாம். நம்முடைய கடந்த கால தவறுகள், பாவங்களுக்காக சித்ரகுப்தரிடம் மன்னிப்பு கேட்டு, இனி சரியான பாதையில் வாழ்க்கை செல்ல வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.