சபரிமலை ஐயப்பன் கோவில் மகரஜோதி தரிசனம் இன்று நடக்கவுள்ளதை முன்னிட்டு தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக 2022 நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை அதிகமாக இல்லை. ஆனால், இந்த ஆண்டு அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. எனவே, இந்த ஆண்டு பக்தர்கள் அலை அலையாக ஐயப்ப தரிசனம் செய்ய வருகின்றனர்.
தினமும் சுமார் 80 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆன்லைன் பதிவு மூலம் உடனடி முன்பதிவு மூலமும் பதிவு செய்யும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வட மாநிலங்களில் இருந்தும் அயல்நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். அனைவருக்கு எளிதாக சாமி தரிசனம் செய்ய தேவசம் போர்டு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க, தரிசனம் முடித்த பக்தர்களை விரைவாக வெளியேறச் செய்யும் பணியில் காவல்துறையினரும் தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாலை 6.30 மணி அளவில் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கும். பின், திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து எடுத்துவரப்படும் நெய்யால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
மகரஜோதி தரிசனம் முடிந்ததும் மலையில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள் மற்றவர்களுக்கு எந்த இடையூறும் நேராத வகையில் இறங்க வேண்டும் என்று தேவசம் போர்டு கேட்டுக்கொண்டிருக்கிறது.