அமாவாசை தினத்தில் காக்கைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் நம் வீட்டிற்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்வார்கள் என்று கூறுவது ஐதீகம்.
ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் நீராடி ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்து, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்று கூறுவார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திதி ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி மறுநாள் 4 ஆம் தேதி மாலை 5.32 மணி வரை இருக்கிறது. ஆகஸ்ட் 4ஆம் தேதி முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.
தேடி வரும் முன்னோர்கள்:
ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலத்தை தட்சிணாயனம் என்று கூறுவார்கள். சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. இது தேவர்களுக்கு தட்சிணாயனம் இரவுப் பொழுது. எனவே, இந்த காலகட்டத்தில் நம்மைப் பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குவார்கள் என்பது ஐதீகம்.
ஆகஸ்ட் 2024 : முக்கிய விசேஷங்கள், விரத நாட்கள், சுப முகூர்த்தங்கள்.. முழு விவரம் இதோ
ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது ஏன்?
கருடப் புராணத்தில் சூரிய மண்டலத்தில் இருந்து இந்த பித்ருலோகம் பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாகச் சொல்லப்பட்டு உள்ளது. பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
பித்ரு தோஷம்:
பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறையினருக்காக செய்யப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகமாகும். ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பது பித்ரு தோஷத்தைக் குறிக்கும். லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5ஆம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5ஆம் இடம், 9ஆம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.
ஆடி அமாவாசை 2024: சதுரகிரி மலைக்கு இந்த தேதி வரை மட்டுமே செல்ல முடியும்..
சோதனை மேல் சோதனை:
ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்படும். துன்பம் விளைவிக்கும். இதற்கு உரிய பரிகாரம் செய்வது மிக அவசியம். இதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கும். தர்ப்பணம் செய்வது பற்றி மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. பித்ரு தர்ப்பணம் என்பதற்கு பித்ருக்களை திருப்தி செய்வித்தலாகும். அமாவாசை நாளில் எள்ளும் தண்ணீரும் கொடுப்பதன் மூலம் மறைந்த நம் முன்னோர்களை திருப்திப்படுத்தலாம்.
மூன்று தலைமுறை தர்ப்பணம்:
அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்கலாம். ராகுகாலம், யமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதிய நேரம் மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களைச் சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
காகத்திற்கு உணவு:
அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால், எமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் மகிழ்ச்சியுடன் நமக்கு ஆசி வழங்குவார்கள். எனவேதான் அமாவாசை நாளில் நாம் காகங்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
தீராத கடன் தீரும்:
நாம் படைக்கும் உணவை காகம் எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை. முன்னோர்களின் படத்தின் முன்பாக சென்று மானசீகமாக பேசி தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு மீண்டும் சாதம் படைக்கவேண்டும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும்.