Pitru Dosha: வாழ்க்கையில் தீராத கஷ்டமா? பித்ரு தோஷம் இருக்குனு அர்த்தம்.. கண்டுபிடிக்கும் வழிகள் மற்றும் பரிகாரங்கள்

Published : Sep 15, 2025, 03:03 PM IST
remedies to do to remove Pitru Dosha

சுருக்கம்

Remedies to remove Pitru Dosha : இந்து மதத்தில் மகாளய பக்ஷம் முக்கியமான புனித நாளாக கருதப்படுகிறது. இந்த காலமானது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களின் ஆன்மா நிம்மதி அடைய வேண்டிய பிரார்த்தனை செய்யும் காலமாக கருதப்படுகிறது.

மகாளய பக்ஷம்

ஆனி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தில் பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறைக்காலம் (15 நாட்கள்) மகாளய பக்ஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு 2025 இல் மகாளய பக்ஷம் செப்டம்பர் மாதம் தொடங்கி அமாவாசை நாளில் முடிவடைகிறது. இந்த காலத்தில் முன்னோர்களின் ஆன்மா அமைதி பெற வேண்டி தர்ப்பணம், ஹோமம் மற்றும் பிற சடங்குகள் செய்யப்படுகின்றன. இதன் மூலமாக பித்ரு தோஷத்தால் ஏற்படும் தடைகள் நீக்கப்பட்டு, முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மகாளய பக்ஷத்தின் முக்கிய நாளான மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. இந்த நாளில் புனித நதிகளில் நீராடி, தான தர்மங்கள் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற செயல்கள் மூலமாக பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

பித்ரு தோஷம் என்றால் என்ன?

பித்ரு தோஷம் என்பது முன்னோர்களின் ஆன்மாக்கள் முழுமையாக அமைதி அடையாமல் அவர்களின் வம்சத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறிக்கிறது. அதாவது இறந்த முன்னோர்களுக்கு சரியான முறையில் இறுதி சடங்குகள் செய்யப்படாத போது அல்லது அவர்கள் ஆசைகள் நிறைவேறாமல் இருக்கும் பொழுது இந்த தோஷம் ஏற்படுவதாக கருதப்படுகிறது. 

மேலும் இந்த தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் ராகு, கேது மற்றும் சனி கிரகங்களின் தவறான அமைப்பாலும் உருவாகலாம். பித்ரு தோஷம் இருந்தால் வேலைப் பிரச்சனைகள், பணப் பிரச்சனைகள், உடல்நிலை குறைபாடு, குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலைமை ஆகியவை ஏற்படும். பித்ரு தோஷத்தை சில அறிகுறிகளை வைத்து நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

குழந்தை பிறப்பதில் தாமதம்

ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படுவது பித்ரு தோஷத்திற்கான முதல் அறிகுறியாகும். எந்த கோயிலில் வேண்டிக் கொண்டாலும், எத்தகைய பரிகாரங்கள் அல்லது தரமான சிகிச்சை செய்தாலும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ உங்களுக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தம். உங்களின் முன்னோர்கள் அமைதி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது. முன்னோர்களின் ஆசி இல்லாமல் பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கே குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று புராணங்கள் கூறுகின்றன.

வீட்டில் அரச மரம் முளைத்தல்

சிலரது வீட்டு சுவர்கள் அல்லது மொட்டை மாடி ஆகிய இடங்களில் எந்த ஆதாரமும் இல்லாமல் அரச மரம் முளைக்கத் தொடங்கும். அப்படி முளைக்குமானால் வீட்டில் தீய சக்திகள் இருப்பதாக அர்த்தம். உங்களின் முன்னோர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும், வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நிரம்பி இருப்பதையும் இது குறிக்கிறது. இதற்கு உரிய பரிகாரங்கள் செய்யாவிட்டால் பிரச்சனைகள் பெரிதாகக் கூடும். அதேபோல் வீட்டில் அடிக்கடி யாருக்காவது சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுவது, காயங்கள் ஏற்படுவது, வாகனங்களில் பழுது ஆகியவையும் முன்னோர்களின் ஆசி இல்லாததையும், பித்ரு தோஷம் இருப்பதையும் குறிக்கிறது.

சுப காரியங்களில் தடை

கடினமாக உழைத்தும் கூட வேலைக்கு பலன் இல்லாமல் இருப்பது, வளர்ச்சியே இல்லாமல் இருப்பது, அடிக்கடி வேலை மாறும் சூழல், தொழிலுக்காக எடுக்கும் முயற்சிகளில் தோல்வி ஆகியவையும் பித்ரு தோஷத்தின் அறிகுறியாகும். மேலும் வாழ்க்கையின் முக்கிய தருணங்களாக விளங்கும் திருமணம் செய்வது, புதுமனை புகுவிழா நடத்துவது, குழந்தை பிறப்பது போன்ற சுப காரியங்கள் எதிர்பாராத விதமாக தடைபட்டு கொண்டே வருவதும் முன்னோர்களின் ஆசி இல்லாததையே குறிக்கிறது. இப்படி நடப்பது முன்னோர்கள் தங்களை நினைவுபடுத்துவதாக அர்த்தம்.

பரிகாரங்கள்

பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் முறையான சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்வது மிகவும் முக்கியமானது. புனித நதிகளில் நீராடி முறையாக தர்ப்பணம் செய்ய வேண்டும். ஸ்ரார்த்த சடங்குகளை முறையாக செய்ய வேண்டும். பித்ரு பக்ஷத்தின் அனைத்து நாட்களிலும் முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபட வேண்டும் உணவும், தண்ணீரும் படைத்து வழிபடுவது முன்னோர்களை அமைதி படுத்த உதவும். முன்னோர்களின் படங்களை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து, தீப தூபாரதனை காட்டி மனதார வழிபட்டால் முன்னோர்களின் மனம் மகிழும்.

மகாளய பக்ஷ காலத்தில் செய்ய வேண்டியை

முன்னோர்களின் பெயரால் ஏழைகளுக்கு உணவு, உடை அல்லது தானம் செய்வது பித்ரு தோஷத்தை குறைக்க உதவும். அமாவாசை நாட்களில் கருப்பு எள், பால், அரிசி போன்ற பொருட்களை தானமாக வழங்கலாம். மகாளய பக்ஷத்தில் விரதம் இருந்து வழிபட வேண்டும். பித்ரு தோஷம் தொடர்புடையவர்கள் நாக பூஜை செய்வதும் பலனளிக்கும். மகாளய பக்ஷ காலத்தில் தெற்கு நோக்கி வீட்டிலோ அல்லது கோயிலுக்கோ சென்று விளக்கேற்றலாம். இது அவர்களுக்கு மோட்சத்திற்கான பாதையை காட்டும் என்று நம்பப்படுகிறது. மகா மிருத்யுஞ்சய மந்திரம் அல்லது காயத்ரி மந்திரம் ஆகியவற்றை ஜெபிக்கலாம். ஆலமரம் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம். மதியம் காக்கைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

முன்னோர்களின் ஆசியைப் பெறுங்கள்

மகாளய பட்சத்தில் மாமிச உணவு அருந்துவது, மது குடிப்பது மற்றும் பிற தீய பழக்கங்களை தவிர்க்க வேண்டும். புனிதமான மனநிலையுடன் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். சடங்குகளை முறையாகவும், பக்தியுடனும் மேற்கொள்ள வேண்டும். மகாளய பக்ஷம் என்பது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தி, பித்ரு தோஷங்களை நீக்கி அவர்களின் ஆசியை பெறுவதற்கு ஒரு அரிய வாய்ப்பாகும். 

பித்ரு தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதற்கு மேற்கூறிய பரிகாரங்களை பக்தியுடன் செய்வது மிகுந்த பலன்களை அளிக்கும். இந்த புனித காலத்தில் உங்கள் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களின் ஆன்மா நிம்மதி அடைய பிரார்த்தனை செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி பெருகும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!