
‘விலங்கு’ வெப் சீரிஸ்-க்குப் பின்னர் நடிகர் விமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் இன்று (ஜூன் 6) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விமல், சாயாதேவி, எம்.எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியிருக்கிறார். தற்போது இந்த படம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம்.
திண்டுக்கல் அருகே மலைக்கிராமம் ஒன்றில் சுப்பிரமணியபுரம், யாக்கோபுரம் என இரண்டு ஊர்கள் இருக்கிறது. யாக்கோபுரத்தில் கிறிஸ்தவர்களும், சுப்பிரமணியபுரத்தில் இந்துக்களும் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு ஊர்களுக்கும் அடிக்கடி மத ரீதியான மோதல் ஏற்படுகிறது. இந்த இரண்டு ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர். திருமணம் நடக்க இருந்த முதல் நாள் இருவரும் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்த மரணங்களை பற்றி விசாரணையை இசக்கி கார்வண்ணன் தலைமையிலான போலீஸ் குழு விசாரிக்கத் தொடங்குகிறது. இந்த கொலையை செய்தது விமலும் சாயாதேவியும் தான் என போலீசாருக்கு தெரிய வருகிறது.
அவர்களை தேடிச்செல்லும் போலீசார் விமலும் சாயாதேவியும் யார் என்ற உண்மையை அறிந்து கொள்கின்றனர். அவர்கள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள் போலீசாருக்கு தெரிய வருகிறது. இந்த கொலைகளை போலீசார் தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? விமலும், சாயாதேவியும் யார்? எதற்காக இந்த கொலைகளை செய்தார்கள்? என்பது தான் படத்தின் மீதிக் கதை. மர்மமான கொலைகள், விசாரணை என பரபரப்பாக முதல் பாதி நகரும் நிலையில். இரண்டாம் பாதியில் மதம் சார்ந்த விஷயங்களை பேசுகிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி அதிகமாக விஷயங்களை பேசுகிறது. மதம் பற்றிய வெகுஜன மக்களின் புரிதல்களை எந்தவித சமரசமும் இல்லாமல் இந்த படம் பேசியிருக்கிறது.
இந்தப் படத்தை வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்கிற முனைப்பில் நடிகர் விமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகியான சாயாதேவியும் கதாபாத்திரமாகவே ஒன்றி வாழ்ந்திருக்கிறார். போலீஸ அதிகாரியாக வரும் படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணனின் நடிப்பு மேலும் படத்திற்கு வலு சேர்க்கிறது. ஒளிப்பதிவு செய்த சுகுமார் மலை கிராமத்தின் ஒவ்வொரு அழகையும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். கிறிஸ்தவ தேவாலய பாதிரியாராக நடித்திருக்கும் எம்.எஸ் பாஸ்கர் வழக்கம்போல் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கு கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்து முடித்திருக்கின்றனர். தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் குறை சொல்லும் அளவிற்கு இல்லாமல் படத்துடன் ஒன்றிப் போகிறது. இந்து மதமே உயர்ந்தது என்றும் மற்ற மதங்கள் பணம் கொடுத்து மக்களை தன் பக்கம் இழுக்கிறார்கள் என்றும், அவர்கள் பெயரளவில் மதம் மாறினாலும் மனதளவில் மாறவில்லை என்ற பிரச்சாரத்தை இசக்கி கார்வண்ணன் தன் படத்தில் சூசகமாக வைத்துள்ளார். மொத்தத்தில் ஓரிரு குறைகள் இருப்பினும் மண் சார்ந்த விஷயங்களை பேசியதற்காக படத்தைப் பார்க்கலாம். பரமசிவனும் பாத்திமாவும் மதத்தை விட மனித நேயம் முக்கியம் என்ற கருத்தை கூறியிருக்கின்றனர்.
மதமாற்றம் மற்றும் மத மோதல்கள் போன்ற சமூகப் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதால், இந்தப் படம் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மதமாற்றச் சிக்கலில் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற வகையில் திரைக்கதை வசனங்களை எழுதியிருப்பதாக சிலர் விமர்சித்துள்ளனர். 'பரமசிவன் பாத்திமா' ஒரு தைரியமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட படம், சமூகத்தில் நிலவும் மதப் பிரச்சினைகளை அலசும் முயற்சி என்றாலும் மத ரீதியான உணர்வுகள் தூண்டப்படலாம் என்பதால், இந்தப் படம் சில சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.