
விக்ரம் நடிப்பில், இயக்குனர் எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில், HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் தான் 'வீர தீர சூரன் 2'. விக்ரமுடன் இணைந்து, எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கடந்த 2 வாரங்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், இன்று காலை 9-மணிக்கு தமிழக அரசின் அனுமதியோடு ஸ்பெஷல் ஷோ திரையிடப்படும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது.
ஒப்பந்தத்தை மீறி 'வீரதீர சூரன்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக ஐ.வி.ஒய் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் 4 வாரம் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்து. பின்னர் தயாரிப்பாளர் தரப்பு மற்றும் ஐ.வி.ஒய் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சுமூக பேச்சு வார்த்தையை நடத்தியதை தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படம் குறித்து, தற்போது அவர்களே ட்விட்டரில் போட்டுள்ள விமர்சனம் குறித்து பார்க்கலாம்.
ரசிகர் ஒருவரின் விமர்சனத்தில், வீர தீர சூரன் தன்னுடைய வெற்றியை 100 சதவீதம் பதிவு செய்துள்ளது. 30 நிமிட ஃப்ளாஷ்பேக் பகுதியைத் தவிர்த்து, இயக்குனர் SU அருண்குமார் சூப்பர் க்ரிப்பிங் ஆக்ஷன் என்டர்டெய்னரை வழங்கியுள்ளார். இரண்டாம் பகுதியும் நெருப்பாக உள்ளது என கூறியுள்ளார்.
மற்றொருவர், வீர தீர சூரன் படத்திற்கு 5க்கு 4 புள்ளிகளை வழங்கி உள்ளார். பின்னர், என்ன ஒரு படம்! எஸ்.யூ அருண்குமாரின் ஒரு பரபரப்பான, இருக்கையின் நுனியில் அமர வைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர். அடுக்கடுக்கான பழிவாங்கும் காட்சிகள் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தின. இடைவேளைக்குப் பிந்தைய அந்த காட்சி மட்டுமே இந்த படத்தை ஒரு பிளாக்பஸ்டராக முத்திரை குத்துகிறது! 12 நிமிட ஒற்றை ஷாட் முற்றிலும் குழப்பமானது. விக்ரம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் மற்றும் ஜிவி பிரகாஷின் இசை சிலிர்ப்பைத் தருகிறது, இது ஒரு அற்புதமான படைப்பு என கூறியுள்ளார்.
ரசிகர் ஒருவர் மிகவும் எளிமையாக இந்த படம் குறித்த தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். இப்படம் ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர் . சியான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஜிவியின் இசை அற்புதம். திரைக்கதை, கதை, தொழில்நுட்ப ரீதியாகவும் பாராட்டும் வகையில் உள்ளது. என கூறி 5க்கு 3 ஸ்டார்ஸ் கொடுத்துள்ளார்.