2006-ல் கிடைத்த மண்டல குழு தலைவர் பதவிகள்.. எதிர்பார்ப்பில் திமுக கூட்டணி கட்சிகள்.. ரீப்பீட்டா, ரிவீட்டா.?

Published : Mar 29, 2022, 10:08 AM IST
2006-ல் கிடைத்த மண்டல குழு தலைவர் பதவிகள்.. எதிர்பார்ப்பில் திமுக கூட்டணி கட்சிகள்.. ரீப்பீட்டா, ரிவீட்டா.?

சுருக்கம்

தற்போது திமுக தலைமையின் உத்தரவையும் மீறி திமுகவினர் நடந்துகொள்வதால், மண்டலக் குழு தலைவர் பதவி கிடைக்குமா என்ற பரிதவிப்பில் கூட்டணி கட்சிகள் உள்ளன. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் மண்டலக் குழு தலைவர்கள் பதவியை முழுமையாக கைப்பற்ற திமுக திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிகள் அதிருப்தி

தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகள் உள்பட பெரும்பான்மையான நகராட்சிகள், பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. 21 மாநகராட்சிகளில் திமுக கூட்டணி கட்சிகள் மேயர் பதவியை எதிர்பார்த்தன. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சியை ஒதுக்கியதோடு, இரு துணை மேயர் பதவிகளையும் திமுக தலைமை ஒதுக்கியது. ஆனால், பிற கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு துணை மேயர் பதவிகள் மட்டுமே வழங்கப்பட்டன. மேலும் நகராட்சி, பேரூராட்சிகளில் வழங்கப்பட்ட பதவிகளில் பல இடங்களில் திமுக நின்று வெற்றி பெற்றதால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்தன.

மீண்டும் தேர்தல்

ஆனால், கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால், போட்டியாக நின்று வெற்றி பெற்றவர்கள் பதவி விலக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அப்படியும்கூட திமுகவினர் முதல்வர் பேச்சை மதிக்காமல் இருந்தனர். ஏற்கனவே இந்த விஷயத்தில் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ள நிலையில், மாநகராட்சிகளில் மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டலக் குழு, பொது கணக்குக் குழு, பொது சுகாதார குழு, கல்விக் குழு, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, நகரமைப்புக் குழு, பணிகள் குழு தலைவர் என பல பதவிகள் தேர்தல் மூலம்  நிரப்பப்பட உள்ளன.

கருணாநிதி தாராளம்

21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணியே மெஜாரிட்டியாக இருப்பதால், இந்தப் பதவிகளைப் பிடிப்பதில் எந்தச் சிக்கலும் இருக்கப்போவதில்லை. ஆனால், மண்டல குழுத் தலைவர்கள் பதவிகளை திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்பார்க்கின்றன. கடந்த 2006-ஆம் ஆண்டில் 6 மாநகராட்சிகள் இருந்தபோதே மண்டல குழு தலைவர் பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக வழங்கியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி அந்தப் பதவிகளைப் பெற்றது. அப்போது மத்தியில் திமுக தயவில் காங்கிரஸ் கூட்டணியும், மாநிலத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக ஆட்சியும் இருந்ததால், சிக்கல் ஏற்படக் கூடாது என்று பார்த்து பார்த்து கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பு அளித்தார் கருணாநிதி.

முதல்வருடன் சந்திப்பு

ஆனால், தற்போது திமுக தலைமையின் உத்தரவையும் மீறி திமுகவினர் நடந்துகொள்வதால், மண்டலக் குழு தலைவர் பதவி கிடைக்குமா என்ற பரிதவிப்பில் கூட்டணி கட்சிகள் உள்ளன. ஆனால், திமுக தரப்பில் மண்டலக் குழு தலைவர் பதவிகள் வழங்கப்படாது என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகின்றன. இந்தப் பதவிகளை முழுமையாக கைப்பற்ற திமுக திட்டமிட்டிருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச திமுக கூட்டணி கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், கடந்த 4 நாட்களாக துபாய் பயணத்தில் முதல்வர் இருந்ததால், அவரை கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்க முடியவில்லை. தற்போது முதல்வர் தமிழகம் திரும்பிவிட்ட நிலையில், இன்று அவரைச் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!