இளைஞர் அணியை அடக்கி வைக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலினிடம் புகாரை கொட்டிய மாவட்டச் செயலாளர்கள்..!

By Selva KathirFirst Published Nov 3, 2020, 2:12 PM IST
Highlights

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சிலரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் பின்னணியை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சிலரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் பின்னணியை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகிகளை நேரடியாக அழைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். மண்டலவாரியாக நிர்வாகிகளை அழைத்து பொதுவாக பேசும் ஸ்டாலின் பிறகு அவர்களின் கருத்துகளை கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சில நிர்வாகிகளை அவரே தனியாக அழைத்து கட்சி நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து விசாரித்துள்ளார். அப்போது சொல்லி வைத்தாற்போல் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் இளைஞர் அணியினர் சிலர் எல்லை மீறி செயல்படுவதாக புகார் அளித்துள்ளனர்.

அதிலும் திருச்சி, தஞ்சை பகுதி இளைஞர் அணி நிர்வாகிகள் மீது அம்மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஸ்டாலினிடம் புகார்களை பட்டியலிட்டுள்ளனர். குறிப்பாக இளைஞர் அணி பொறுப்புகளுக்கு தமிழகம் முழுவதுமே வசூல் வேட்டை நடைபெற்று வருவதையும் ஸ்டாலின் கவனத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் கொண்டு சென்றுள்ளனர். மேலும் மாவட்ட அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனத்தில் கூட தங்களை யாரும் கலந்து பேசுவதில்லை என்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகே தங்களுக்கு தெரிய வருவதாகவும் பொறுமித் தள்ளியுள்ளனர்.

மேலும் இளைஞர் அணி நிர்வாகிகள் தங்களை வந்து சந்திப்பது இல்லை எனவும் தாங்களாகவே போஸ்டர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதாகவும் ஸ்டாலினிடம் மாவட்டச் செயலாளர்கள் எடுத்துக்கூறியுள்ளனர். ஒரு சில மாவட்டங்களில் இளைஞர் அணி நிர்வாகிகள் நிழல் மாவட்டச் செயலாளர்களாக செயல்படுவதையும், சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கித் தருவதாக கூறி தற்போதே பணம் வசூலிக்க ஆரம்பித்திருப்பதையும் கூறியுள்ளனர். இதன் மூலம் மாவட்டச் செயலாளர்களை கட்சிக்காரர்கள் மதிப்பதில்லை எனவும் காரியம் ஆக வேண்டும் என்றால் இளைஞர் அணி நிர்வாகிகளை சென்று சந்திப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

அதோடு மட்டும் அல்லாமல் ஒன்றியச் செயலாளர் நியமனம் முதல் கிளைகக்கழக நிர்வாகிகள் வரை இளைஞர் அணியினர் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதில் தகுதியற்ற பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலினிடம் அடுக்கியுள்ளனர். இதே புகார்களை கோவை சுற்றுவட்டார திமுக நிர்வாகிகளும் ஸ்டாலின் காதுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதிக்கு நெருக்கமாக இருக்கும் இரண்டு பேர் தான் மாநிலம் முழுவதும் இளைஞர் அணி நிர்வாகிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அவர்கள் பெயரைச் சொல்லித்தான் லோக்கலில் வசூல் நடப்பதாகவும் போட்டுக் கொடுத்துள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் பரவலாக இளைஞர் அணி நிர்வாகிகள் 2 பேர் மீது ஒரே மாதிரியான புகார் வந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கண்காணிக்கும் படி தனக்கு நெருக்கமான சீனியர் திமுக புள்ளிகள் இரண்டு பேரை ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் உதயநிதிக்கு நெருக்கமான அந்த இரண்டு இளைஞர் அணி நிர்வாகிகளையும் ஸ்டாலினால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள். ஏனென்றால் அந்த இரண்டு பேர் சொல்வது தான் உதயநிதிக்கு தாரக மந்திரம் என்றும் உடல் வேறு உயிர் ஒன்று என்பது போல் மூன்று பேரும் பழகி வருவதாக சொல்கிறார்கள்.

அதிலும் இரண்டு பேரில் ஒருவர் அடுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் தான் என்று தற்போதே தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாகவும் இன்னொருவர் தான் என்ன அமைச்சரகா விரும்புகிறேனோ அந்த அமைச்சராவேன் என்று சூளுரைத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். அதே சமயம் தங்கள் மீது புகார் அளித்த மாவட்டச் செயலாளர்கள் யார் யார் என்பதை தற்போது அந்த இரண்டு இளைஞர் அணி புள்ளிகளும் கண்டுபிடிக்க முயல்வதாகவும் இதனால் திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் – இளைஞர் அணி நிர்வாகிகள் இடையே பனிப்போர் தொடங்கியுள்ளதாம்.

click me!