
முன்னாள் திமுக அமைச்சர் மீது, வாலிபர் சோடா பாட்டிலை வீசினார். ஸ்டாலின் பிறந்தநாளில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுக் கூட்டம் நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இதையொட்டி விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி தலைமையில் ‘இளைஞர் எழுச்சிநாள்’ பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக முதன்மை செயலாளர் துரை முருகன், எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், ராதாமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேடையில் கட்சி நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர்.
கூட்டத்துக்கு ஏராளமான மக்கள் வந்து இருந்தனர். அப்போது, மேடை அருகே வந்த ஒரு வாலிபர், திடீரென ஒரு பெரிய கல்லை எடுத்து பொன்முடி மீது வீசினார். மேடையில் நின்றிருந்த பூபதி என்ற நிர்வாகி குறுக்கே வந்ததால், அவரது முகத்தில் பயங்கரமாக விழுந்தது.
இதில், அவரது பற்கள் உடைந்து ரத்த கொட்டியது. அவர் அலறி துடித்தார். இதை பார்த்ததும், மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அடுத்த நொடியில், அந்த வாலிபர், மறைத்து வைத்திருந்த சோடா பாட்டிலை மீண்டும் வீசினார். ஆனால் அந்த அந்த பாட்டில் அவரது கால் அருகே விழுந்தது.
உடனே அங்கிருந்த பொதுமக்களும், திமுக தொண்டர்களும் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து, தர்மஅடி கொடுத்தனர். பின்னர், போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், படுகாயமடைந்த நிர்வாகி பூபதியை மருத்துமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.