வங்கி பணிக்காக பஞ்சாயத்து தலைவர் பதவியை தூக்கி எறிந்த இளம் பட்டதாரி பெண் .. து.தவுக்கு ஜாக் பாட்.

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2022, 2:02 PM IST
Highlights

வங்கியில் வேலை கிடைத்ததால் பட்டதாரி இளம் பெண் தனது ஊராட்சிமன்ற தலைவர் பதவியை தூக்கி எறிந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

வங்கியில் வேலை கிடைத்ததால் பட்டதாரி இளம் பெண் தனது ஊராட்சிமன்ற தலைவர் பதவியை தூக்கி எறிந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எதிர்காலத்தை யோசித்து இந்த முடிவை எடுத்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வில்வராயநல்லூர் ஊராட்சி மன்றத்தில்  வெற்றி பெற்ற  இளம்பெண் தனது ஊராட்சி மன்ற தலைவர்  பதவியை உதறியுள்ளார்.இது தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்  வில்வராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பொய்யாமொழி, இவர் அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது மகள் நிலவழகி பொறியியல் பட்டதாரியை திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்கினார். அதில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனார் நிலவழகி, தனது தலைவர் பதிவுயை அவர் சிறப்புடன் செய்து வந்தார். ஆனால் அவர் அரசுப் பணிக்காக அடிக்கடி போட்டித் தேர்வுகளை எழுதி வந்தார். அதனுடன் வங்கி போட்டித் தேர்வுகளையும் அவர் எழுதி வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இவருக்கு வேலை கிடைத்துள்ளது. இதனால் தனது பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த  நிலவழகி, கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

எனவே தலைவர் பதவிக்கான அதிகாரம் துணைத் தலைவருக்கு தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. தலைவர் பதவியில் இருந்த வரை அந்த பணியை சிறப்பாக செய்ததாக நிலவழகி கூறியுள்ளார். மக்கள் என்னை தலைவராக தேர்ந்தெடுத்தனர், ஆனால் வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பஞ்சாயத்து தலைவர் பதிவியை இராஜினாமா செய்துள்ளேன், பஞ்சாயத்துத் தலைவர் பதவியிலிருந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லை, பதவி இல்லாமல் கூட நன்மை செய்ய முடியும், வழக்கம்போல அப்பாவுடன் சேர்ந்து மக்களுக்கு நன்மை செய்வேன். இவ்வாறு நிலவழகி கூறியுள்ளார். 
 

click me!