
தமிழக காங்கிரஸுக்கு தலைவராக இருப்பதை விட பாகிஸ்தான் பார்டர்ல பாயை விரிச்சு படுத்துக்கலாம்! எப்ப அடி விழும், எப்ப இடி விழும்னு எவனுக்கும் தெரியாது...என்று கதர்சட்டைக்காரர்கள் நக்கலாய் கூறுவார்கள். இது திருநாவுக்கரசருக்கும் நிச்சயம் பொருந்தும்தானே! அரசருக்கு எதிராக ஆட்டத்தை துவக்கிவிட்டன காங்கிரஸின் பிற அணிகள்.
கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதியன்றுதான் திடுதிப்பென ‘பண மதிப்பிழப்பு’ அறிவிப்பை வெளியிட்டது மோடி அரசு. இதன் பின் தேசம் நெடுக நடந்த பரபரப்புகள் யாவரும் அறிந்ததே. இந்த அறிவிப்பை கறுப்பு பண முதலைகளுக்கு மோடி வைத்த செக் ஆக பி.ஜே.பி. வர்ணிக்கிறது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளோ இதை மக்கள் நலனுக்கு எதிராக மோடி அரசு வீசிய வெடிகுண்டாக விமர்சிக்கின்றனர். கூடவே ஓராண்டை தொட போகும் இந்த அறிவிப்பை நினைவூட்டும் விதமாக மத்திய அரசை கண்டித்து இந்தாண்டு நவம்பர் 8-ம் தேதியன்று கறுப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசர், அதேநாள் மாலையில் பி.ஜே.பி. அரசை கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டாராம். இதற்கு மத்திய தலைமையிடம் அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு ரெட் கார்டு போட்டுவிட்டனராம்.
அனுமதியை மறுப்பதற்கு காரணமாக தலைமை நிர்வாகிகள் சில காரணங்களை சொல்கின்றனர். ஆனால் அதில் அரசருக்கு உடன்பாடுமில்லை, அவர் அதில் திருப்தியடையவுமில்லை. மத்திய தலைமை தன் கோரிக்கையை நிராகரிக்க காரணமே, தமிழகத்திலுள்ள தனக்கெதிரான கோஷ்டி நிர்வாகிகள்தான் என்று குமுறுகிறாராம் அரசர்.
தனது பொதுக்கூட்டத்துக்கு மறுப்பு சொல்லும் வகையில் என்னதான் நடந்தது என்று ஸ்மெல் செய்து அவர் பார்க்கையில், தனக்கு எதிரான கோஷ்டி தலைவர்கள் சிலரின் சித்து விளையாட்டை கண்டறிந்திருக்கிறார். அதாவது அந்த தலைவர்கள் தலைமை அலுவலகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் “இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தருவதை தவிருங்கள். காரணம் இந்த நிகழ்வை காட்டி, சிலர் தமிழகத்தில் வசூல் மேளாவில் இறங்குவார்கள். இது கட்சியின் பெயரை கெடுக்கும்.
அதாவது மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் தடைபட்டுள்ளது, மக்கள் இன்னமும் இந்த பண நெருக்கடி பூதத்தின் பிடியிலிருந்து விலகவில்லை என்று சொல்லித்தான் நாம் எதிர்க்கிறோம். ஆனால் அதற்காக நடத்தப்படும் பொதுக்கூட்டத்துக்காக நிதி வசூலில் இறங்குவது மிகப்பெரிய முரணான செயலாகவும், கட்சியின் பெயருக்கு அவமானத்தையும் தரும்.
கூடவே நமது கூட்டணி கட்சிகள் இந்த வசூலை பற்றி அறிந்தால் தங்களை காப்பாற்றிக் கொள்ள நம்மை வெளிப்படையாக விமர்சிக்கவும் தயங்க மாட்டார்கள். இந்த அவமானம் நமக்கு தேவையா? ஏன் இந்த பொதுக்கூட்டம்!” என்று போட்டுக் கொடுத்தார்களாம். அதைத் தொடர்ந்தே அனுமதி மறுக்கப்பட்டதாம்.
இதை ஸ்மெல் செய்துவிட்ட அரசர் ‘பொதுக்கூட்டத்தை காரணம் காட்டி யாராச்சும் வசூல் பண்ணினா, எங்கிட்ட புகார் சொல்லலாம், உடனே நான் அவங்க மேலே நடவடிக்கை எடுப்பேன். ஆனா அதைவிட்டுட்டு இப்படி இல்லாததும் பொல்லாததுமா போட்டுக் கொடுத்து கட்சி நிகழ்வையே தடை செஞ்சா இங்கே நான் எப்படி கட்சியை வளர்க்கிறது?” என்று புலம்பிக் கொட்டுகிறாராம்.
தமிழக காங்கிரஸை பொறுத்த வரையில் நிகழ்ச்சி நடக்கும் போதுதான் காலை வாருவார்கள் என்கிற நிலை மாறி, நிகழ்ச்சி நடத்திட திட்டம் போட்டாலே கூட காலை வாருவார்கள் என்கிற அளவுக்கு முன்னேற்றம் வந்திருக்கிறது.
இதுவும் வளர்ச்சியின் அறிகுறிதானோ?! டவுட்டு#