
ஆதித்யநாத் ஆட்சியில் ஒரு சாதியினர் மட்டும் குறிவைக்கப்படுகிறார்கள்…சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் ஆதித்யநாத் ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த(யாதவ்) அதிகாரிகள் மட்டுமே குறிவைத்து பழிவாங்கப்படுகிறார்கள் என்று முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிகட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
சமாஜ்வாதிக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் லக்னோவில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வந்திருந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி அளித்த போது கூறியது-
கவலையில்லை
நான் வாழ்ந்த வீட்டை முதல்வர் ஆதித்யநாத் பூசாரிகளைவைத்து ஹோமம் நடத்தி, சுத்தப்படுத்துகிறார் என்பது குறித்து கவலையில்லை. அந்த வீட்டில் நான் 3 மயில்கள் வளர்த்து வந்தேன் அதை நன்றாக பார்த்துக்கொள்ளட்டும்.
2022ம் ஆண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், தீயணைப்பு வண்டியில் கங்கை நீரைக் கொண்டு வந்து, முதல்வர் வீட்டில் பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்துவார்கள் போல இருக்கிறதே?.
வயதில் மூத்தவர்
புதிய முதல்வர் ஆதித்யநாத் இன்னும் அதிகாரப்பூர்வ வீட்டுக்கு குடியேறவில்லை.புதிய வீட்டுக்கு அடுத்த வாரம் தொடங்கும் நவராத்திரைவிழாவின் 9-வது நாளில்தான் வருவார் என நம்புகிறேன்.
ஆத்தியநாத் என்னைக் காட்டிலும் ஒரு வயதில் மூத்தவர்தான், ஆனால், என் பணியை ஒப்பிடும் போது, எனக்கு பின்னால்தானே இருக்கிறார்.
சட்டம் ஒழுங்கு
என் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குறைகூறி வருகிறார்கள். இதேபோல யோகியின் ஆட்சியிலும் பாலியல் கொடுமையையும், கொலைகளையும் ஊடகங்கள் காட்டி விமர்சனம்செய்யப் போகிறார்கள். அந்த நாளை நான் பார்க்கத்தான் போகிறேன்.
துப்புறவு பணி சூப்பர்
ஆத்தியநாத் ஆட்சியில் அதிகாரிகள் நன்றாக துப்புறவு பணி செய்கிறார்கள். இப்படி நன்றாக வேலை செய்கிறார்கள் எனத் தெரிந்து இருந்தால், டன் கணக்கில் குப்பைகளை கொட்டி இருப்பேன்.
பழிவாங்கும் செயல்
இந்த ஆட்சியில் குறிப்பிட்ட சாதியினரைச்(யாதவ்) சேர்ந்த அதிகாரிகள் மட்டுமே பழிவாங்கப்பட்டு, இடமாற்றமும், இடைநீக்கமும் செய்யப்பட்டு வருகிறார்கள். இன்று(நேற்று)காலைகூட ஐ.பி.எஸ். அதிகாரி ஹிமான்ஸ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்தசட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்திருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அடுத்துவரும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.