ஏலகிரி மாவட்டம் உறுதி… அமைச்சர் அதிரடி பேட்டி !!

By Selvanayagam PFirst Published Jan 9, 2019, 11:52 AM IST
Highlights

வேலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஏலகிரி என்ற புதிய மாவட்டம் உருவாவது உறுதி என அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டு நேற்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்படி பழனிசாமி அறிவித்தார். இத்துடன்  சேர்ந்து தமிழகத்தில் 33 மாவட்டங்கள் உள்ளன.

இந்நிலையில் நிர்வாக வசதிக்காக மேலும் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 60 மாவட்டங்கள் அளவுக்கு தமிழக மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும் என பாமக  நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில்  அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட புதிய பஸ்களில் வேலூருக்கான 8 புதிய பஸ்களை வேலூர் புதிய பேருந்துதான்  நிலையத்தில் இருந்து வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர்  அவர்  பேசும்போது, வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஏலகிரி  மாவட்டம் உருவாகும் என அதிரடியாக தெரிவித்தார். தற்போது அரக்கோணம் முதல் கண்டிலி வரை 240 கிலோமீட்டர் தொலைவுக்கு வேலூர் மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த மாவட்டத்தில்  அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை ஆர்காடு, கே.வி,குப்பம், காட்பாடி, பேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் என மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி பிரிக்கப்பட்டால் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட், ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய தொகுதிகள் இந்த ஏலகிரி மாவட்டத்துக்குள் வரும்.

சாண்டல் நகரம் என்றழைக்கப்படும் என திருப்பத்தூரை தலைநகராகக் கொண்டு கண்டிப்பாக ஏலகிரி மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

வரும் காலங்களில் இதை பரிசீலித்து தேவையான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தன்னிடம்  உறுதி அளித்ததாகவும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

click me!