
பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், பேசும்போது ஒருசில வார்த்தைகள் தவறாக வந்திருக்கலாம், அதை பெரிது படுத்தக்கூடாது எனவும் எடப்பாடி அணியை சேர்ந்த அமைச்சர் வைத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அணியும் ஒ.பி.எஸ் தரப்பு அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை எப்போது என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் தினகரனை கட்சியில் ஒதுக்குவதாக அமைச்சர்கள் மத்தியில் முடிவு செய்யப்பட்டது. மேலும் ஒ.பி.எஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜெயக்குமார் அறிவித்தார்.
தினகரனை நீக்கியது குறித்து ஒ.பி.எஸ் பேசுகையில், தர்ம யுத்தத்தின் முதல் வெற்றி என தெரிவித்தார்.
இதை கிண்டல் செய்யும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார், கட்சி நலன் கருதியே தினகரனை விலக்கினோம் என்றும் ஒ.பி.எஸ் நிர்பந்தத்தால் விலக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் தம்பிதுரை பேசுகையில், எடப்படியே முதலமைச்சர் என தெரவித்தார்.
தம்பிதுரை, ஜெயக்குமார் இவ்வாறு கூறியதை ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்தார்.
நாங்கள் முதலமைச்சர் பதவி கேட்கவில்லை எனவும், ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை வேண்டும் என்றே வலியுறுத்தினோம் எனவும் முனுசாமி தெரிவித்தார்.
மேலும், சசிகலாவையும் தினகரனையும் நீக்கி அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், சசிகலா பொதுச்செயலாளர் என்ற பிரமான பத்திரத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கோரிக்கையை நிறைவேற்றினார் பேச்சுவார்த்தை என்றும், இல்லையென்றால் மக்களை சந்தித்து கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து அமைச்சர் தங்கமணி வீட்டில் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம், வைத்தியலிங்கம் உள்ளிட்ட அமைச்சர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியதாவது:
அம்மாவின் ஆட்சி நடைபெற வேண்டும். எங்கள் தரப்பில் எந்த நிபந்தனையும் இல்லை. குழப்பமும் இல்லை.
ஒ.பி.எஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளோம்.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்த தயாராக உள்ளோம்.
பேசும்போது தவறான வார்த்தைகள் வந்திருக்கலாம். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது.
இரட்டை இலையை மீட்டு மீதமுள்ள நான்கு ஆண்டுகள் வலுவான ஆட்சியை அதிமுக அமைக்கும்.
ஜெயலலிதா மரணம் அடைந்தபோது முதலமைச்சராக இருந்தவர் பன்னீர்செல்வம் தான். அவரே விசாரணை அமைத்து உத்தரவிட்டிருக்கலாம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதை செய்ய அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.