திராவிட இயக்கத்திற்கு இலக்கிய அறிவு இல்லை..!! பாமரன் கொடுத்த பகிரங்க விளக்கும்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 21, 2019, 11:58 AM IST
Highlights

 நீங்கள் கம்பனின் இலக்கியச் சுவையைப் பருகிக் கொண்டிருந்த பொழுதுகளில், கைம்பெண்களின் மறுவாழ்வுக்காகப் போர்க்குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், பெரியாரும் திராவிட இயக்கத்தினரும்! நீங்கள் சிலப்பதிகார மாதவியின் நாட்டிய அழகை சிலாகித்துக் கொண்டிருந்தபோது, கோயில்களில் தேவரடியார்களாக பொட்டுக்கட்டி விடப்பட்ட அபலைகளின் விடிவுக்காக தெருக்களில் இறங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் திராவிட இயக்கத்தினரும்!

"கம்பராமாயணத்தின் இலக்கியச் சுவையை உணரக் கூடிய அளவுக்கு திராவிட இயக்கத்தினருக்கு இலக்கிய அறிவு இல்லை.இலக்கியத்துக்காக இவர்கள் எதையும் செய்யவில்லை. திராவிட இயக்கங்கள் தமிழ் இலக்கியத்துக்கு அளித்தது எதுவுமில்லை "என கூறியுள்ள எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு சக எழுத்தாளர் பாமரன் பதிலடி கொடுத்துள்ளார் அதில்  குறிப்பிட்டுள்ள  அவர்...

உண்மைதான் வண்ண நிலவன்,  திராவிட இயக்கத்துக்கு இலக்கியச் சுவை கிடையாது….இலக்கிய அறிவு கிடையாது...இலக்கியத்துக்காக இவர்கள் எதையும் செய்யவில்லை…. உண்மைதான். நீங்கள் கம்பனின் இலக்கியச் சுவையைப் பருகிக் கொண்டிருந்த பொழுதுகளில், கைம்பெண்களின் மறுவாழ்வுக்காகப் போர்க்குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், பெரியாரும் திராவிட இயக்கத்தினரும்! நீங்கள் சிலப்பதிகார மாதவியின் நாட்டிய அழகை சிலாகித்துக் கொண்டிருந்தபோது, கோயில்களில் தேவரடியார்களாக பொட்டுக்கட்டி விடப்பட்ட அபலைகளின் விடிவுக்காக தெருக்களில் இறங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் திராவிட இயக்கத்தினரும்! 

நீங்கள் திருவாசகத்தின் ஒலி நயத்தில் பரவசத்தோடு கிறங்கிக் கிடந்தபோது, ஒருவாசகம் கூட படிக்க இயலாமல் வக்கற்றுப் போன திராவிடக் குழந்தைகளுக்கு இரவுப் பள்ளிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள் திராவிட இயக்கத்தினர். நீங்கள் சிருங்கார ரசத்தோடு ”சீதா கல்யாணமே…” என ராகம் மீட்டிக் கொண்டிருந்தபோது ! " 1921 வருடத்தைய இந்து கைம்பெண்களின் தொகையினை நோக்குகையில், அய்யகோ என் நெஞ்சு துடிக்கிறது! ஒரு வயதுள்ள விதவைகள் 597 ஒன்னு முதல் இரண்டு வயதுள்ள விதவைகள் 494 . இரண்டு முதல் மூன்று வயதுள்ள விதவைகள் 1257.மூன்று முதல் நான்கு வயதுள்ள விதவைகள் 2837. நான்கு முதல் அய்ந்து வயதுள்ள விதவைகள் 6707.ஆக மொத்தம் 11892. 

பால் மணம் மாறாத அய்ந்து வயதிற்குட்பட்ட இளம் குழந்தைகள் மட்டிலும்11,892 பேர் இருந்திருக்கிறார்கள் என்பதையும், தன் பிறவிப் பயனையே நாடுவதற்கில்லாது, இன்பம் துய்ப்பதற்கில்லாது அடக்கி வைக்கப்பட்டிருக்கும் பதினைந்து வயதிற்குட்பட்ட கைம்பெண்கள் 2,32,147 பேர் இருந்திருக்கிறார்கள் என்பதையும் கேட்கவே, என் குலை நடுங்குகிறது. இத்தகைய படுமோசமான விதவைத் தன்மையை எந்த நாகரிக உலகம் ஏற்கும்?”- என குதறப்பட்ட அந்த மானுடக் கூட்டத்துக்காக கதறித் துடித்துக் கொண்டிருந்தார் பெரியார் . உண்மைதான் ! திராவிட இயக்கத்துக்கு இலக்கியச் சுவை கிடையாது.  இலக்கிய அறிவு கிடையாது. இலக்கியத்துக்காக இவர்கள் எதையும்செய்யவில்லை.உண்மைதான்! 

 நாணும் பெண்ணாய், சலசலத்து ஓடும் தாமிரபரணியைச் சிலாகித்து நிற்கையில், நதியில் கொல்லப்பட்ட பதினேழு உயிர்களைப் பற்றிப் ”பிதற்றுகிற” பேர்வழிகளுக்கு என்ன இலக்கிய அறிவு இருக்க முடியும்? உண்மைதான்.மண்ணோடு மண்ணாக மக்கள் செத்துச் சிதைந்து கொண்டிருக்கும்போது, இதிகாசத்திலும் இலக்கியத்திலும் படம் லயித்துக் கிடக்கும் மனது வாய்க்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்தான்.ச்சே….! பாழாய்ப்போன இந்தப் பெரியாருக்கு இது புரியாமல் போயிற்றே என்ன செய்ய? இவ்வாறு எழுத்தாளர் பாமரன் பதிலடி கொடுத்துள்ளார். 

click me!