உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை: மதுக்கடைகளை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!! பின்னியெடுக்கும் பாமக..!!

By Thiraviaraj RMFirst Published May 7, 2020, 10:19 AM IST
Highlights

மது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்றும், அதனால் மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

 T.Balamurukan

மது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்றும், அதனால் மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.மது அருந்துவதற்கான வாய்ப்புகளையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்து விட்டிருப்பது மக்களை காப்பாற்றவா? இல்லை சாகடிக்கவா? என்று தெரியவில்லை என்கிறார் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் திருஞானம்.

தமிழக அரசு குடிமகன்களுக்கு டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டிருப்பது குறித்து அவர் பேசும் போது... "மது குடிப்பவர் மது போதைக்கு அடிமையானதை போல தமிழக அரசு மதுவால் வரும் வருவாய்க்கு அடிமையாகியுள்ளது". ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இதுவரை 44 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், மது கிடைக்காததால் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. மதுவுக்கு அடிமையாகி, அது இல்லாவிட்டால் வாழவே முடியாது என்று வர்ணிக்கப்பட்டவர்கள் கூட, இப்போது மதுவை மறந்து விட்டு புதிய மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இது மிகப்பெரிய, ஆக்கப்பூர்வமான மாற்றம் ஆகும். இதை பயன்படுத்தி தமிழகத்தை மது இல்லாத திசையில் பயணிக்க வைக்க வேண்டிய தருணத்தில் மதுக்கடைகளை மீண்டும் திறந்திருப்பது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவாகும்.

மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்காக தமிழக அரசு கூறியுள்ள காரணம் சற்றும் ஏற்க முடியாதது. 'தமிழக எல்லைகளில் உள்ளவர்கள் மது அருந்துவதற்காக அண்டை மாநிலங்களுக்கு செல்வதால் அதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது'. இந்த காரணமே, தமிழக அரசின் தோல்வியாக பார்க்கப்படக் கூடும்.கோயம்பேடு சந்தையில் நடந்த ஊரடங்கு மீறல்கள் காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. மதுக்கடைகள் திறக்கப்பட்டால் நோய்த் தொற்று பரவும் வேகம் மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, கடந்த 44 நாட்களாக இல்லாமல் இருந்த சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். எனவே, மதுக்கடைகளை திறப்பதால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து, இம்முடிவை அரசு கைவிட வேண்டும்; மதுவிலக்கை அறிவிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, கொரோனா பரவல் காலத்தில் மது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்றும், அதனால் மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், மது அருந்துவதற்கான வாய்ப்புகளையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் ஒழிப்பில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் வழிகாட்டும் அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையைக் கூட மதிக்காமல் மீண்டும் மதுக்கடைகளை திறப்பது கொரோனா அரக்கனுக்கு தமிழகத்தின் வாயில்களை நாமே திறந்து விடுவதற்கு ஒப்பானது ஆகும்.

தமிழ்நாட்டில் கடந்த 6 வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்கள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளன. அவர்களின் கைகளில் அடுத்த வேளை உணவுக்குக் கூட காசு இல்லை. இத்தகைய சூழலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், மது அருந்துவதற்காக வீட்டில் உள்ள பொருட்களையும், மனைவியின் தாலியை பறித்து அடகு வைப்பது, திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற அவலங்கள் ஏற்படக் கூடும். இப்படி ஒரு நிலை ஏற்படுவதில் அரசுக்கு விருப்பம் இருக்காது என்றே நான் நம்புகிறேன். இத்தகைய அவல நிலை ஏற்படக் கூடாது என்றால், மதுக்கடைகளை திறப்பதை அரசு கைவிட வேண்டும்.
 

click me!