
மருத்துவப் படிப்பில் சேர தேசிய அளவிலான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு எழுதுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு நிகராக மாநில பாடத்திட்டத்தை தரம் உயர்த்தி அந்த மாணவர்களுக்கு நிகராக மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களை உருவாக்குவது என்பது நீட் தேர்வு விவகாரத்திற்கு ஒரு தீர்வாக அமையும்.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால் அந்த தேர்வை எதிர்கொள்ளும் அளவிற்கு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டிய கடமை அரசினுடையது.
அந்த அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் தமிழக அரசுப் பள்ளி பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.