
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்புகளும் போராட்டங்களும் வலுத்து வருகின்றன. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அதில் ஒரு கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்டாலின் நீட் தேர்வை எதிர்க்கிறார். ஆனால் கருணாநிதி உடல் நலத்துடன் அரசியலில் இருந்திருந்தால் நீட் தேர்வுக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருப்பார் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஸ்டாலின், இதுபோன்ற தரம்தாழ்ந்த கருத்துக்களுக்கு பதிலளித்து தனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என தெரிவித்தார்.
ஸ்டாலினின் இந்த கருத்து தொடர்பாக தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமிழிசை, கேள்வி கேட்கும் தரம் தனக்கு இருப்பதாகவும் ஆனால் அதற்குப் பதிலளிக்கும் தரம் ஸ்டாலினிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.