மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன முக்கிய தகவல்.!

By vinoth kumarFirst Published Jul 31, 2021, 5:51 PM IST
Highlights

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மின்வெட்டு குறைவு என புள்ளிவிவரம் கூறுகிறது. மின்வெட்டு இல்லை என்ற நிலை படிப்படியாக கொண்டு வரப்படும்.

மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

அனைத்து மின் பகிர்மான மாவட்ட தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், வட்டார பொறியாளர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இயக்குனர் ராஜேஷ் லகானி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 40 நாட்களில் மின்சார வாரிய தொடர்பான புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள், உயர்மட்ட மின் பாதையை குறைத்து புதைவிட பாதையாக மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார். குறைந்த மின் அழுத்தப் பிரச்சனைகள் கடந்த ஆட்சியில் சரி செய்யப்படவில்லை. 3 - 4 மாததிற்குள் அந்த பிரச்சனை சரி செய்யப்படும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மின்வெட்டு குறைவு என புள்ளிவிவரம் கூறுகிறது. மின்வெட்டு இல்லை என்ற நிலை படிப்படியாக கொண்டு வரப்படும். 

இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த போது ஏன் 4.5 லட்சம் பேருக்கு மின் இணைப்பு தரவில்லை? திமுக ஆட்சியில் மின்தடை ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்கின்றன. தமிழகம் முழுவதும் மின்சார வாரியம் தொடர்பாக 1 லட்சத்து 60 ஆயிரம் புகார்கள் வந்தன. இதில் 1 லட்சத்து 51 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள புகார்களுக்கான தீர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றார்.

click me!