பணம் அதிகம் பிடிபட்ட தொகுதிகளில் தேர்தல் நிறுத்தமா..? சத்யபிரதா சாஹூ அதிரடி விளக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 5, 2021, 12:39 PM IST
Highlights

தேர்தல் செலவின பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர், தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளிப்பர். அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும்.
 

பணம் அதிகம் பிடிபட்ட தொகுதிகளில், தேர்தல் நிறுத்தப்பட வாய்ப்பு தற்போதைக்கு எதுவும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும், நாளை நடக்க உள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ’’அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, அமைதியாக ஓட்டுப்பதிவு நடக்க, அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். பாதுகாப்பு பணியில், 30 ஆயிரம் போலீசார், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற போலீசார், ஊர் காவல் படையினர் என, 30 ஆயிரம் பேர்; 24 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள்; பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள, ஊர் காவல் படை உட்பட போலீஸ் அல்லாதவர்கள், 18 ஆயிரம் பேர் என, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் அமைதியாக நடக்க, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். வாக்காளர்கள் அமைதியாக வந்து ஓட்டளிக்க, ஏராளமான பணிகளை செய்துள்ளோம். ஜனநாயகம் தழைக்க, அனைவரும் கண்டிப்பாக ஓட்டளிக்க வர வேண்டும். இம்முறை, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு சாதனை படைக்க, அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில், ஓட்டுச்சாவடிக்கு வந்து, ஓட்டளிக்க வேண்டும்.

ஒருவர் ஓட்டை மற்றொருவர் பதிவு செய்திருந்தால், உண்மையான வாக்காளர், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அனுமதியுடன், 'டெண்டர் ஓட்டு' அளிக்கலாம். அவருக்கு ஓட்டுச்சீட்டு வழங்கப்படும். அதில், அவர் தன் ஓட்டை பதிவு செய்யலாம். அந்த ஓட்டு, தனி கவரில் சீலிடப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும். ஓட்டு எண்ணிக்கையில் சமநிலை ஏற்பட்டால், இந்த ஓட்டு பரிசீலிக்கப்படும்.

இதுவரை இல்லாத அளவுக்கு, இம்முறை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி என, 400.15 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருமான வரித் துறையினர், பல்வேறு சோதனைகள் நடத்தி, ஏராளமான பணம் பறிமுதல் செய்துள்ளனர். பணம் கொடுத்ததாக, ஏராளமானோர் பிடிபட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.

பணம் அதிகம் பிடிபட்ட தொகுதிகளில், தேர்தல் நிறுத்தப்பட வாய்ப்பு தற்போதைக்கு எதுவும் இல்லை. பணம் பிடிபட்டது குறித்து, தேர்தல் பார்வையாளர், தேர்தல் செலவின பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர், தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளிப்பர். அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும்.

கொரோனா நேரத்தில், தேர்தல் நடத்துவது பெரும் சவாலாக உள்ளது. வழக்கமாக, 63 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் இருக்கும். தற்போது, கொரோனா காரணமாக, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 88 ஆயிரத்து, 937 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதனால், தேர்தல் பணிக்கு, 33 சதவீதம் கூடுதல் பணியாளர்கள் தேவைப்பட்டனர். எனவே, மூத்த அலுவலர்களையும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளோம். முன்னர், உதவிப் பேராசிரியர் நிலை வரை, தேர்தல் பணிக்கு எடுத்தோம். இம்முறை, பேராசிரியர் நிலையில் உள்ளவர்களையும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளோம்’’ என அவர் தெரிவித்தார். 

click me!