
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்திரகாண்ட் ஆகிய 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய அளவிலான தோல்வியை தழுவியது, கோவா பஞ்சாப் ஆகிய மாநிலத்திலாவது வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த மாநிலம் காங்கிரஸுக்கு கைகொடுக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு சென்றது. முக்கிய தலைவர்கள் அனைவரும் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வினர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியால் அடி மேல் அடி கிடைத்து உள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியும், சோகத்திலும் உள்ளனர்.2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைமை யாரையும் அறிவிக்காத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்தார். இதனால் தேசிய அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். பல்வேறு கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்த நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவிலான தோல்வியையே தழுவியது.நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முக்கிய தோ்தலாக கருதப்ப்பட்ட உ.பி். உள்ளிட்ட 5 மாநில தேர்தலும் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்
31 மாநிலங்களில் 18 மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரைக்கு பஞ்சாப்பை பறிகொடுத்ததால் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது.மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை எதிர்க்க மதசார்பற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு எதிர்கட்சிகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் தனித்து போட்டியிட்டது தான் காரணம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தான் பாஜக மிகப்பெரிய வெற்றியை உத்தரபிரதேசத்தில் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் தலைமையிலான அணியில் இடம் பெறலமா? என்ற தயக்கம் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. சோனியாவை கைவிட்டு மம்தா பானர்ஜி தலைமையிலான அணியா உருவாக்கலாம் என சில மாநிலங்கள் எண்ணுகின்றன. தற்போது உள்ளது போல் இரண்டு அணியாக பிரிந்து இருப்பது பாஜகாவிற்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. இதே கருத்தை தான் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும் வலியுறுத்தியுள்ளார். மதசார்பற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராகுலா? மம்தாவா?
திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி பெற்ற படுதோல்வி அதிர்ச்சி அடையவைத்துள்ளதாகவே கூறுப்படுகிறது. ஏற்கனவே ராகுல்காந்தி தலைமையில் சந்தித்த தேர்தலும் தோல்வி, தற்போது பிரியங்கா காந்தி தலைமையிலான தேர்தலிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்தநிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் பாஜகவிற்கு எதிரான வலுவான எதிர்கட்சியாக திகழவில்லையென கூறியிருந்தார். எனவே 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக ராகுல்காந்தியை ஆதரிக்குமா? அல்லது மம்தா பானர்ஜியை ஆதரிக்குமா என்ற குழப்பமான நிலை உள்ளது. அதற்கு ஏற்றார் போல் தேர்தல் உத்தியாளர் பிரசாத் கிஷோர் மீண்டும் மம்தா பக்கம் வந்துள்ளதால் சில மாற்றங்கள் உருவாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.