
மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கு கவலைக்குரியதாக இருப்பதாக முதலமைச்சர் பேசினார். மேலும் மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழங்கள் செயல்பட வேண்டும் என்பதே மக்கள் விருப்பம் என்று தெரிவித்தார்.இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில், தென் மண்டல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் சந்திப்புக் கூட்டம் இன்று நடந்தது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், "2020-21-ஆம் ஆண்டுக்கான தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பில் இந்திய அளவில் தமிழகத்தின் 19 பல்கலைக்கழகங்கள் மற்றும் 33 கல்லூரிகள் முதல் நூறு இடங்களுக்குள் உள்ளன. சென்னையிலுள்ள லயோலா கல்லூரி அனைத்து இந்திய அளவில் மூன்றாவது இடமும் பெற்று தமிழகத்திற்குப் பெருமை பெற்று தந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: " மக்கள்தான் எஜமானர்கள் மறந்துடாதீங்க".. அரங்கத்தை அதிரவைத்த ஸ்டாலின்.. ஆடிப்போன அதிகாரிகள்.
கல்வி என்பது பொது பட்டியலில் இருப்பதை வைத்து, மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கும் கவலைக்குரியதாக உள்ளதாக கூறினார். கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும்.மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம். அதனை உணர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும் என்று பேசினார்
மேலும் நாட்டில் உயர்கல்விக்கு பயிலவரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம், 27.1 விழுக்காடு ஆக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு என்ற அளவுக்கு மிக உயர்ந்திருக்கிறது என்று கூறிய முதலமைச்சர், மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து, சாதாரண நிலையில் உள்ளவர்களும் சிறந்த நிலைக்கு உயர வழிவகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் படிக்க: அரசு 1 ரூபாய் செலவு செய்தாலும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.. கெத்து காட்டும் முதல்வர் ஸ்டாலின்.!
உயர்கல்வித் துறைக்கு 5,369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனதாக பேசிய முதலமைச்சர், தாய்மொழிக் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு, நான்கு பொறியியல் கல்லூரிகளில் இளநிலை வகுப்புகள் தமிழில் நடப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார். பாடநூல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல, 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குகிறது.தமிழகத்தில் 1,553 கல்லூரிகள் 52 அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், 1,096 தொழிற்கல்வி நிறுவனங்கள் உயர்கல்வி அளித்து தமிழகம் கல்வி வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன.அறிவுப்பூர்வமான, அறிவியல்சார்ந்த உண்மைகளை மட்டுமே பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் பேசினார்.