
இரட்டை இலை சின்னம் கட்சியின் அதிமுக என்ற கட்சியின் பெயரை யாருக்கு ஒதுக்குவது என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்கிடையே சின்னம் ஒதுக்குவது தொடர்பான விசாரணையை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் போட்டியில் முதல்வர் பழனிசாமி அணியும் தினகரன் அணியும் உள்ளனர். தேர்தல் ஆணையம் விதித்த கால அவகாசத்துக்குள் சின்னத்தைப் பெறுவது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முதல்வர் அணி சமர்ப்பித்துவிட்டது.
ஆனால், குறித்த நேரத்தில் தினகரன் அணி சார்பில் எந்த ஆவணங்களோ பிரமாணப் பத்திரங்களோ தாக்கல் செய்யப்படவில்லை. ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கையை தேர்தல் ஆணையமும் உயர்நீதிமன்ற மதுரை கிளையும் நிராகரித்துவிட்டன.
இதையடுத்து இன்று மதியம் இரட்டை இலை சின்னத்தையும் கட்சி பெயரையும் ஒதுக்குவது தொடர்பான இறுதி விசாரணை இன்று மதியம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த விசாரணையை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தினகரன் தாக்கல் செய்த மனுவும் இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. எனவே உச்சநீதிமன்றத்தின் விசாரணை, தேர்தல் ஆணையத்தின் விசாரணையை பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் விசாரணை, தேர்தல் ஆணையத்தின் இறுதி விசாரணையை பாதிக்காது என கூறப்படுகிறது. எனினும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது. இதனால் சின்னம் யாருக்கு என்று தெரிவதற்கு கால தாமதம் ஆகலாம்.
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பான இறுதி முடிவை அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.