உதயநிதி மூலம் அன்பில் மகேஷ் கை ஓங்குமா...? திருச்சியில் கே.என். நேரு ஆதரவாளர்கள் அச்சம்!

By Asianet Tamil  |  First Published Jul 17, 2019, 9:49 AM IST

உதயநிதி இளைஞரணி வந்துவிட்டதால், இளைஞரணி நியமனத்தில் உதயநிதி தன்னிச்சையாகவே முடிவு எடுப்பார் என்று நம்பப்படுகிறது. திருச்சியில் அன்பில் மகேஷின் ஆலோசனைப்படி நியமனங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 


திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலையெடுப்பார் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
திருச்சி மாவட்ட திமுக ஒரு காலத்தில் அன்பில் தர்மலிங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1989-ம் ஆண்டில் திமுக நீண்ட காலம் கழித்து ஆட்சிக்கு வந்தபோது அவருடைய மகன் அன்பில் பொய்ய்யாமொழிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. புதிய வரவான கே.என். நேருவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன்பிறகு அன்பில் தர்மலிங்கத்தின் குடும்பத்தைத் தாண்டி திருச்சியில் கே.என். நேரு உருவெடுத்தார். அன்பில் பொய்யாமொழி மறைவுக்கு பிறகு அரசியலுக்கு வந்த அவருடைய தம்பி அன்பில் பெரியசாமி கே.என். நேருவின் ஆதரவாளாராகவே இருந்தார்.


தற்போது அன்பில் தர்மலிங்கத்தின் மூன்றாவது தலைமுறையாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துவருகிறார். அன்பில் மகேஷும் உதயநிதியும் சிறு வயது முதல் நண்பர்கள் என்பதால், அவர்களுக்குள் நெருக்கம் அதிகம். உதயநிதி சினிமாவுக்குள் வந்த பிறகு, அவருடைய மன்ற பொறுப்புகளை அன்பில் மகேஷ்தான் கவனித்துக்கொண்டார். தற்போது உதயநிதி திமுக இளைஞரணி செயலாளராக உயர்ந்துவிட்டார். அதே இளைஞரணியில் மகேஷும்  துணைச் செயலாளராக உள்ளார். இந்த சூழ்நிலையில் திருச்சியில் மீண்டும் அன்பில் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கிடைத்துவருகிறது.
திருச்சி மாவட்டத்தில் இளைஞர் அணி பொறுப்பில் பெரும்பாலும் கே.என். நேருவின் ஆதரவாளர்களே இருந்துவருகிறார்கள். திமுகவின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் கே.என். நேருவுக்கு திருச்சியில் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். ஆனால், தற்போது உதயநிதி இளைஞரணி வந்துவிட்டதால், இளைஞரணி நியமனத்தில் உதயநிதி தன்னிச்சையாகவே முடிவு எடுப்பார் என்று நம்பப்படுகிறது. திருச்சியில் அன்பில் மகேஷின் ஆலோசனைப்படி நியமனங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tap to resize

Latest Videos


விரைவில் திருச்சியில் மகேஷ் ஆதரவாளர்கள் இளைஞரணி பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள் என்று அவருடைய ஆதரவாளர்கள் உறுதிப்பட கூறிவருகிறார்கள். இதுபோன்ற காரணத்தால், இளைஞரணி பொறுப்பில் உள்ள கே.என். நேரு ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

click me!